பக்கம் எண் :


612திருத்தொண்டர் புராணம்

 

தடம் புனல். "நெடும்புனல்" (1626). தடம் - பெரிதாகிய; இல் - ஏழனுருபு. பால் - பால் போன்ற பயனுடைய என்றலுமாம்.

பணியால் - "இப்பொய்கை முழுகிக் காண்" (1634) என்று இறைவர் பணித்தாராதலின் அந்தப் பணியால் என்க. கயிலைசென்று "கண்டு கும்பிடும்....குறிப்பிது" என்றது நாயனார் திருவுள்ளக் கருத்து; பொய்கையில் மூழ்குதலன்று; ஆயினும் இறைபணி நிற்றலே கடனென அமைந்து மூழ்கினர் என்பார் பணியால் என்று விதந்து கூறினார்.

370

திருக்கயிலைமலை - (திருநொடித்தான்மலை)

I திருச்சிற்றம்பலம்

போற்றித் திருத்தாண்டகம்

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி மீளாமே யாளென்னைக் கொண்டாய் போற்றி
யூற்றாகி யுள்ளே யொளித்தாய் போற்றி யோவாத சத்தத் தொலியே போற்றி
யாற்றாகி யங்கே யமர்ந்தாய் போற்றி யாறங்க நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி.

1

உண்ணா துறங்கா திருந்தாய் போற்றி
         யோதாதே வேத முணர்ந்தாய் போற்றி
யெண்ணா விலங்கைக்கோன் றன்னைப் போற்றி
         யிறைவிரலால் வைத்துகந்த வீசா போற்றி
பண்ணா ரிசையின்சொற் கேட்டாய் போற்றி
         பண்டேயென் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணா யுலகுக்கு நின்றாய் போற்றி
         கயிலை மலையானே போற்றி போற்றி.

10

திருச்சிற்றம்பலம்

பதிகக் குறிப்பு :- வேற்றாகி விண்ணாகி நின்றாய்! ஓவாத சத்தத்து ஒலியே! கருவாகி ஓடும் முகிலே! ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய்!; நீராவியான நிழலே!; சில்லுருவாய்ச் சென்று திரண்டாய்!; பல்லுயிராய்ப் பார்தோறு நின்றாய்!, கல்லுயிராய் நின்ற கனல்!, பண்ணின் இசை! எண்ணும் எழுத்தும் சொல்லானாய்!, கண்ணின்மணி!, இமையாதுயிரா திருந்தாய்!, மூவாய் பிறவா யிறவாய்!, நெடிய விசும்பொடு கண்ணே!, நீள வகல முடையாய்!, கடிய உருமொடு மின்னே!, உண்ணா துறங்கா திருந்தாய்!, என்று பூமிமுதலாக எட்டு மூர்த்தமே திருமேனியாகக் கொண்டு அறியப்படும் நிலையினுள் மறைந்து விளங்கும் இறைவராகிய கயிலை மலையானே போற்றி போற்றி என்று துதிப்பது.

குறிப்பு :- விண்ணளவு ஓங்கி உயர்ந்தும், அளவுபடாது அகன்று பரந்தும் காணப்பட்ட பெரும் பனிமலைச்சாரற் கடுங்கடத்துத் தனியே நிற்கின்றார் நாயனார்; முன்னே தோன்றிய பெருமுனிவர் மறைந்தனர்; அசரீரியால் கேட்ட அவர் வாக்கின்படி உடலின் ஊறு நீங்கிய ஒளியுடைய உடல் பெற்று எழுந்து தனிநின்ற நாயனார் வானும் மலையும் காற்றும் இடியும் மின்னும் முதலிய பூத பௌதிகங்களின் பெருந்தோற்றத்தினுள்ளும் அவற்றின் குணங்களுள்ளும் இறைவரை அருவுருவாகக் கண்டு உணர்கின்றார்; அத்திருமுன் தாம் நிற்பதை அனுபவத்தில் உணர்ந்து அவற்றையே இறைவரது வடிவாகக்கண்டு "வேற்றாகி விண்ணாகி நின்றாய்!" என்பது முதலாகிய அத்தன்மைகளாலேயே துதிக்கின்றமை காண்க. இக்காட்சியினையே தொடர்ந்து பின்னர்த் திருவையாற்றில் கயிலைக் காட்சியினையும் இக்கருத்தே தொடர்ந்த இரண்டு திருத்தாண்டகப் பதிகங்களாலும் இத்தன்மைபற்றிப் போற்றியருளுவது காண்க. 1646-ன் கீழ்த்தரப்படும் பதிகக்குறிப்புப் பார்க்க.


திருவையாறு - அப்பர் வந்தெழுந்த வா (உப்பன் குட்டைக் குளம்)