பதிகப் பாட்டுக் குறிப்பு :- I வேற்றாகி - வேறுமாகி. விண்ணினின்றும் வேறு; மீளாமே - "மீளு மத்தனையு மக்கினிக் கடன்" (1631) என்று முனிவராய் வந்த இறைவர் பணித்தவாறு மீளாதேயும் என்றதும் குறிப்பு. மீளாமே - மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே", "மீண்டு வாரா வழி" (திருவா); ஓவாத சத்தத்தொலி - நாதம். சத்தம் - விண்ணாகி என்ற விண்ணின்குணம். ஆறங்க நால்வேதமானாய் - "வேத நாயகனே" (1633). கயிலை மலையானே போற்றி போற்றி - இது இந்த மூன்று பதிகங்களுக்கும் மகுடம் . இவ்வாறு ஒரு முடிபில் மூன்று பதிகங்களுள்ள சிறப்புத் திருக்கயிலாயத்துக்கே உரியது. - (2) பொய்ச்சார் - பொய்த்தார் என்பது எதுகை நோக்கி இவ்வாறு நின்றது. - (5) நேர்வார் - நிகர்ப்பார்; ஒப்பார். - (6) பூட்சி - உணவு - இருப்பு. குறிக்கோள் என்றலுமாம். பார்தோறும் - அண்டங்கள் தோறும். - (7) இமையாது உயிராது இருந்தாய் - கயிலை மலையை இறைவராகக் கண்ட தோற்றம். "நெடிய...உடையாய்" (10) உண்ணாதுறங்கா திருந்தாய்" (11) III (3) "செய்யாய்" முதலியவையும் இக்கருத்து. - (8) ஊழி ஏழு - இங்கு ஊழி என்றது ஊழியில் மீளத் தோன்றும் உலகங்களை. - (9) ஆவா கனகத்திரளே - அடியு முடியும்...நின்றாய் என்க. - (10) II எண்ணா இலங்கைக்கோன்...கேட்டாய் - இப்பகுதிகளைத் தனித்தனி ஒவ்வோர் தொடராக்கி உரைத்துக்கொள்க. ஓதாதே வேதமுணர்ந்தாய்... "வேத நாயகனை" (1633). 1636. (வி-ரை.) ஆதி...யாரறிவார்? - வடபாற் கயிலைமலைச் சாரலில் தடத்தின் மூழ்கிய அவர், தென்பால் திருவையாற்றில் ஒரு வாவியில் வந்து எழுந்த செய்தியை உரைக்கப் புகும் ஆசிரியர் அவ்வுரைக்கு "அருட் பெருமையை யார் அறிவார்?" என்று முகவுரை செய்து தொடங்குகின்றார். ஆதி தேவர் - ஏனைத் தேவர்களது செயல்கள் ஆதி தேவரது ஆணைக்குட்பட்டு ஒரு வரம்பினுள் நிகழத்தக்கன. ஆதி தேவர் எல்லாம் வல்லவராதலின் அவரது அருட்செயல் எல்லை கடந்து வரம்பின்றி நிகழ வல்லது என்றது குறிப்பு. "கருணைக்கிணங்காத வன்மையையும் நான்முகன் கற்பிக்க வொரு கடவுளோ?" (தாயுமானார்) என்றபடி இங்கு வடக்குந் தெற்கும் தடமும் வாவியும் பொருந்தும்படி செய்யவல்லது ஆதிதேவரது அருட் பெருமை; ஏனையோர் எவர்க்கும் அது அரிது என்றபடியாம். "எழுந்தனர் - அருட்பெருமை யாரறிவார்" என்று இக்கருத்தைப் பின்னர் வைத்துரைத்தலினும், இவ்வாறு முன்வைத்துரைத்தத் தொடங்கிக் கூறுவது படிப்போர்மனத்தை மேற்கூறும் செய்தியை உணர்ந்து உட்கொள்ளுதற் கேற்றபடி பண்படுத்தும் தகுதிபற்றி. "முன்னவனே முன்னின்றால் முடியாத பொருளுளதோ?" (132), "அவரலாற் புரங்கள் செற்ற, ஏவணச் சிலையி னாரை யார்தொடர்ந் தெட்ட வல்லார்?" (190) முதலியனவாக இறுதியில் முடித்துக் கூறும் கூற்றுக்களின் வைப்பு முறை இங்கு ஒப்பிட்டுக் காணத் தக்கது. யார் அறிவார்? - அனுபவித்து அறியும் நாயனாரே யன்றி வேறு யாவர் அறியவல்லார் என்பதும் குறிப்பு. போத மாதவர் - "ஞானத் தவமுனிவர் " (1266), "பெருமையை உணர்வார்" (1637) என்பதுங் காண்க. ஓர் வாவி - இது, திருவையாற்றில் கோயிலுக்கு வடமேற்கே சமுத்திர தீர்த்தம் என்றும், உப்பங் கொட்டைப் பிள்ளையார் கோவிற் குளம் என்றும வழங்கும் ஒரு குளம் என்று அறியப்பட்டு, அதில் ஒவ்வோர் ஆண்டிலும் ஆடி - அமாவாசை நாளில் அப்பர் காட்சி என்று இவ்வரலாற்று விழாக் கொண்டாடப்படுகிறது. |