தழுவிய சிந்தையினையுடைய நிலையில் ஒழுகினர். இவ்வாறு பாண்டிய நாடெங்கும் போய்ப் பரவியே, சோழநாட்டை யணைந்து, வழியில் முன்சென்ற தலங்களை மறுபடியும் வணங்கிக்கொண்டு, பொய்ப்பாசம் போக்குவார் பூம்புகலூர் வந்தடைந்தனர். திருப்புகலூர் இறைவரது திருவடிகளை வணங்கித் திரு மூன்றிலிற் பணி செய்து பேரன்புடன் வைகினார். அந்நாளில், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், க்ஷேத்திரக் கோவை, குறைந்த திருநேரிசை, தனிநேரிசை, ஆருயிர்த் திரு விருத்தம், தசபுராணம், பாவநாசப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய எண்ணிறந்த திருப்பதிகங்களைப் பாடியருளினார். பொன்னும் மணிகளும் வருதல் அவ்வாறு அரசுகள் பணி செய்யு நாளில் அவரது நன்னிலைமையினை உலகுக்குக் காட்டும் பொருட்டு, இறைவர் அருளினாலே உழவாரம் நுழைந்த விடமெல்லாம் பொன்னினொடு நவமணிகள் பொலிந்தன. அவற்றை அங்குப் பருக்கைக் கற்களோ டுடன்வைத்து எண்ணி உழவாரத்தில் ஏந்தி வாவினிற் புக எறிந்தார். அரம்பையர் வருதல் அவ்வாறு பொன்னோடும், மணியோடும், புல்லோடும், கல்லோடும், வேறு பாடிலா நிலை துணிந்த நாயனாரது முன்பு தேவ அரம்பையர்கள் விண்ணுலகத்தினின்றும் வந்திழிந்தனர். மின்னற்கொடிகள் இறங்குவனபோல வந்து, தான நிறை சுருதிகளிற் றகுமலங்காரத் தன்மையிற்கான அமுதம் பரப்பக் கண்கள் வெளி பரப்பி இசை பாடினார்கள்; கற்பகத் தளிர்போன்ற அடிகள் சாரிகை செய்யவும், விரல்களின் வட்டணையோடு கை பெயரவும், கையின் வழியே கண்கள் புடை பெயரவுமாகக், கொடிபோல் நுடங்கி ஆடினார்கள். மேலும் அவர்கள் பாடுதலும், ஆடுதலும், அலர்மாரி பொழிதலும், கூடுவார் போன்றணைதலும், குழலவிழவோடுதலும், மீளுதலு மாகிய பற்பல காமச் செயல்களையும் செய்யவும், இறைவன்றிருவடியில் நினைவு நீங்காத உணர்வுடைய மெய்த் தவமுடைய மேலோராகிய நாயனார் தமது சித்தநிலை சிறிதும் திரியாமல் தாம் செய்பணியின்றலைநின்றனராய், அவர்களை நோக்கி "உம்மாற் குறையுடையே னல்லேன்; திருவாரூர் அம்மானுக்காளானேன்; உமது பண்பிற்படேன்; நீவிர் அலையேன் மின்" என்று, "பொய்ம் மாயப் பெருங் கடலில்" என்னும திருத்தாண்டகம் பாடி யருளினார். ஒரு செயலும் செய்ய மாட்டாது அரம்பையர் இறைஞ்சி அகன்றனர். திருவடிப்பேறு இந்நிலையை எல்லா வுலகும் அறிந்து போற்ற, அன்புடைய பத்தியே வடிவாகிய வாகீசர் இறைவரது மெய்யருளினை எய்தும் காலம் அணித்தாகச், சில நாள்கள் அங்கு அமர்ந்திருந்தார். அந்தக் கரணங்கள் இறைவனையே பொருந்திய தலைப்பாட்டினாலே "தமது புகலாகிய என்னைப் புகலூர்ப் பெருமான் இனிச் சேவடிக்கீழ் இருத்திடும்" என்ற முன்னுணர்ச்சினால் திருவிருத்தங்கள் பலவும் பாடினார். "புண்ணியா வுன்னடிக்கே போதுகின்றேன்" என்னும் திருத்தாண்டகத்தை அருளிச் செய்து சிவானந்த ஞானவடிவேயாகி, இறைவரது திருவடிக்கீழ் எல்லாவுலகங்களும் ஏத்த, நாயனார் அமர்ந்தருளினார். வானவர்கள் மலர் மழை பொழிந்தனர்; ஐந்து துந்துபிகளும் முழங்கின; எல்லா யோனிபேதங்களிலும் தங்கும் எல்லா வுயிர்களும் நாயனார் திருவடிப் பேறடைந்த சித்திர மாதத்துச் சதயமாகிய அத்திருநாளில் உண்ணிறைந்த பெரு மகிழ்ச்சி நிறைந்தன. |