1. | நல்லொழுக்கத்துள் நிற்கும் குடிகள் நிறைந்திருப்பது நாட்டுக்குச் சிறப்பு (1267). |
2. | உலகுக்குச் சிவநெறி காட்டும் ஆசாரியர்கள் அவதரிக்கும் பேறு பெறுவது நாட்டுக்குப் பெரும் பேறாகும் (1276). |
3. | சிவம் பெருக உள்ள ஊர் சிறந்த ஊர் (1277). |
4. | வேளாளர்க்கு விருந்தோம்பலும் சுற்றந்தழுவுதலும் சிறப்பாயுரியன (1281). |
5. | சில ஆண்டுகள் இடையீடுள்ளனவாய் மகப்பேறுகள் பெறுதல் நல்வாழ்க்கைக்குரியது (1283). |
6. | ஆண்மக்களுக்குச் சென்னி மயிர் நீக்கும் சடங்கு, கலை பயில்வித்தல் முதலிய சடங்குகள் செய்வித்தல் முந்தையோர் மரபு (1285). |
7. | பெண்மக்களுக்கு மண வயது பன்னிரண்டென வகுத்தது தமிழர் மரபு (1287). |
8. | பெண்ணை மணம் பேசிப் பெற்றோரிசைவு கொண்டு மணமுடித்தல் தமிழர்களுள் வழங்கிய வழக்கு (1288). |
9. | மணம் பேசுங்காலத்து மனமகனிடத்துச் சிவன்பாலன்பும், அரசனிடத்தருளும், வீரமும், வனப்பும் முதலிய குணங்களுடைமை கண்ட பின்பே பெண் பெற்றோர் மணமிசைவது வழக்கு (1289). |
10. | மேலாகிய உழவுத் தொழிலேயன்றி, வேந்தற்குற்றுழி வினைமேற்சென்று போர் புரிந்து நாடு காவலுக்குத் துணைசெய்வதும் வேளாளர்க்குரிய தொழில்களுளொன்று (1291). |
11. | யாக்கை நிலையாமை என்பது தொன்றுதொட்டு வரும் உண்மை (1292). |
12. | கணவனா ரிறந்தபோது தானும் உயிர்நீத்து அவனுடனே சேர்வது கற்பு நெறி வழுவாத கடமையாகிய ஒழுக்கமாய்க் கொண்டனர் தமிழ் மாதர்கள் (1293). |
13. | அரசனுக்காக நாடு காவலின் பொருட்டுப் போர்செய்து உயிர் துறத்தல் புகழ் தருவதெனக் கொண்டது தமிழர் வழக்கு (1295). |
14. | மணம்பற்றிய புறச்சடங்கு நிகழாவிடினும், பெற்றோர் இசைவுதந்த வளவில் மணம் முடிந்ததாகவே முடித்துத் திலகவதியம்மையார், மணமகன் இறந்தமை கேட்டவுடன் கற்புநிலை வழுவாது தாமும் உயிர்நீத்து அவருடன் சேரத் துணிந்த செய்தி உலகுக்குப் பெரிய எடுத்துக்காட்டாகிய நல்லொழுக்கமாம் (1297). |
15. | உடனே உயிர் நீத்தல் நிகழாதபோது கணவனை யிழந்தோர் கைமை நோன்பு கிடந்து தவஞ் செய்து உயிர்களுக்கு அருள்தாங்கி மனையின்க ணிருத்தலும் தமிழ் மக்களின் மரபு (1299). |
16. | பெற்றோரும் மற்றோரும் இறக்கக் கண்டபோது, தேசநெறி நிலையாமை கண்டு அதனை மனங்கொண்டு ஒழுகுதல் அறிவுடையோர் தன்மை (1300). |
17. | தேச நெறி நிலையாமை கண்டபோது அறங்கள் செய்தல் மதியுடையவர் செயல் (1300). |
18. | சோலைகள் வளர்த்தல், குளம் வெட்டுதல், வந்தடைந்தார்க்கு வேண்டுவன அளித்தல், விருந்தளித்தல், நாவலர்க்குக் கொடுத்தல் முதலியவை உலக அறங்கள். இவை பசு புண்ணியச் செயல்களாம் (1301). |
19. | உலகியல்பின் நிலையாமையைக் கண்டு துறவு பூணுதலும் அறிவுடையார் செய்கையாம் (1302). |