98. பலவகையாலும் இறைவரைப் பாடியும், வழுவில்லாது மெய்ம்முயற்சியால் திருப்பணிசெய்தும், மனங்கசிந்து கண்ணீர் பெருக்கியும் இடைவிடாது சிந்தை சிவன் தாள்களைத் தழுவியும் வரும் இவை எப்போதும் நிகழப்பெறுதல் சிவனருளின் முழு விளைவு உளதாகும் அணிமையைக் காட்டும் அறிகுறியான நிலைகளாம் (1676). 99. இறைவரது திருமுன்றிலில் வரும் பொன்னும் மணியும் புல்லும் கல்லும் வேறுபாடிலா நிலைமையிற் காணுதல் பெரியோர்க்கே அடைவதாகும்் (1683). 100. மின்கொடிகள்போல அசைந்து ஆடியும் பாடியும் அலர்மாரிமேற்பொழிந்தும் கூடுவர் போன்றணைந்தும் மதனவசக் கைதவங்கள் செய்யும் தேவ அரம்பையர்களை மாயப்பவத் தொடக்கா மிருவினைகளே என்று நோக்குதலும், அவர் செயல்களால் சிறிதும் சித்த நிலைதிரியாது செய்பணியின் றலைநிற்பதும் அத்தனார் திருவடிக் கீழ் நினைவகலா அன்புருகு மெய்த்தன்மையுணர்வுடைய விழுத்தவத்து மேலோர்க்கே இயல்வதாகும் (1687). 101. அந்தக்கரணங்கள் சிவனருள் தன்மைகளிலேயன்றி வேறெங்கும் வியாபரிக்காத தலைப்பாடு நேர்ந்தபோது என்னைச் சிவன் இனித் தன் அடிக்கீழ் வைக்கும் என்ற உணர்வு எழும் (1691). அவ்வாறு சிவனருள் நிறைவு உளதாகப் பெற்ற பெரியோர் சிவானந்த ஞானவடிவேயாகித் திருவடிக்கீழெய்துவர் (1692). பதிப்பாசிரியர் குறிப்பு இவ்வுரை நூலுள் 1692-ல் திருப்பாட்டின் உரையின் கீழ் உரையாசிரியர் 739 - 740 பக்கங்களில் நாயனாரை இறைவர் ஒரு சிங்கத்தின் வடிவில் வந்து தின்றுவிட்டதாக வழங்கும் கற்பனைக் கதை பற்றியும் அதன் ஆதாரங்கொண்டு திருப்புகலூர் ஆலயத்தின் வெளிச்சுற்று மதிற்சுவரில் அத்தகைய ஒருருவம் வைத்து வழிபடப்பட்டும், நாயனார் திருநட்சத்திரத்தில் இறைவரைச் சிங்க உருவமாகச் சித்தரித்தும், ஆங்குள்ள விளக்குகளை எல்லாம் அவித்து முழு இருளில் நாயனாரை எழுந்தருளுவித்துத் திருக்காப்பிடுவதுமான அசம்பாவிதங்களை எல்லாம் கண்டித்து அவற்றைக் களைய வேண்டிய அவசியம் பற்றி விளக்கினார்கள். உரையாசிரியர் அவர்கள் பின்னர்த் தாம் எழுதிய "வாகீசர் அல்லது மெய்யுணர்தல்" என்ற நூலிலும் இது குறித்து வலியுறுத்தினார்கள். பற்பல சபைகளிலும் தாம் ஆற்றிய சொற்பொழிவுகளிலும் தெளிவுற விரித்தார்கள். பல சைவப் பெரும் புலவர்களும் இக்கருத்துக்கே அரண்கோலினர். இத்தகைய இடைவிடாத நன்முயற்சிகளின் பயனாய்த் திருப்புகலூர் ஆலயத்தின் வெளிச்சுற்று மதிற்சுவரில் முன்னர் இருந்த அசம்பாவிதமான உருவம் சுமார் ஏழு ஆண்டுகளின் முன்பு அகற்றப்பட்டு அங்கு நாயனார் சிவலிங்கத்துடன் ஐக்கியமாகும். காட்சியுள்ள உருவம் அமைக்கப்பட்டுள்ளது. நாயனாரின் திருநட்சத்திரத்தில் ஆலய விளக்குகளை யெல்லாம் பேரொளி விட்டு ஒளிரச் செய்து, அவ்வொளி வெள்ளத்திடையில் நாயனாரை இறைவனுடன் அணைவித்துத் திருவிழாக் கொண்டாடப்படுகிறது. இவ்விவரங்களை "வாகீசர் அல்லது மெய்யுணர்தல்" என்ற நூலின் பிற் சேர்க்கையில் திருப்புகலூர் அக்னீசுவரர் தேவ ஸ்தானத்தார் தந்துள்ளனர். க. மங்கையர்க்கரசி |