80. | தலயாத்திரையில் சிவதலங்களை இறைஞ்சும் விருப்போடு செல்லும்போது வழிச்செல் வருத்தமும் பசியும் நீர் வேட்கையும் முதலியவற்றிற்குச் சித்தம் அலையாது செல்லுதல் பேரன்புடைப் பெருமக்களியல்பு (1569). |
81. | அன்பர் வருத்தம் தணித்தாற்றி அருள்புரிதல் ஆண்டவரது கருணைத்திற்ன (1570 - 1574). |
82. | அடியார் வணக்கம் என்ற பெருஞ் சிறப்புத் திருவாரூரிற்போலவே காஞ்சிபுரத்துக்குமுரிய இயல்பாகும் (1583 - 1586). |
83. | வேளாளர்களினியல்பு மெய்ம்மைநிலை வழுவாத விழுக்குடிமைச் செம்மையுடைமை (1606). |
84. | உம்பர் குழாம், தொண்டர்களின் பின் நின்று வழிபாடியற்றத் தக்கார் (1608). |
85. | திருக்கயிலைப் பெருங்கோலத்தின் குறிப்பை நினைப்பிப்பது திருக்காளத்தியின் சிறப்பு (1612). |
86. | இறைவரது திருக்கயிலைக் காட்சி விருப்பம், பசி துயில் முதலிய எல்லாவற்றையும் வென்று மேலூக்கவல்லது (1619 - 1622). கண்ணப்ப நாயனாரது சரித நிகழ்ச்சியும் இங்குக் கருதத்தக்கது. |
87. | அன்பர்களைக் கொடுவிலங்குகளும் ஊறு செய்யமாட்டா (1620). |
88. | தம் உடம்படங்க ஊறுபடினும் கயிலை காணும் ஊக்கமுடையோர் பொருட்படுத்தாது மேற்செல்ல முயல்வர் (1622 - 1624). |
89. | கயிலை மால்வரை மானுடப் பான்மையோர் அடைவதற்கரிது (1630). |
90. | என்றைக் கிருக்கினும் ஒருநாள் மாளும் இவ்வுடல், கயிலை காணும் நேர்மை பெற்றிலதேனும், அம்முயற்சியில் மாள நேரில் நன்றே என்று துணிவது பெரியோர் தன்மை (1631). |
91. | யோனிகள் யாவையும் சத்தியும் சிவமுமாம் சரிதையிற் பயில்வனவாகக் காணுதல் சிவனருளாலாவது (1639). |
92. | கயிலை நாயகன் காட்சியும் கண்ட சிவானந்தானுபவமும் உரைக்குள் அடங்கும் தரத்தனவல்ல (1640 - 1645). |
93. | உலகில் மண் முதலிய பற்று நீத்த பெரியோரும் ஓரிடத்தமர்ந்திருந்து இறைவரைப் பணியும் அருள்பெற்றுத் திருமடம் அமைத்து வசித்தல் திருவருள் வழி நிகழுமாயின் துறவுநிலைக் கிழுக்கில்லை (1654). |
94. | தம்மைக் காணும் பொருட்டு ஆளுடையபிள்ளையார் திருப்பூந்துருத்திக்கு எழுந்தருளுவது கேட்ட ஆளுடைய அரசுகள் எதிர்சென்று, காணாவகை தூரத்தே தொழுது, திருக்கூட்டத்துட் புகுந்து, அவர் ஏறிவரும் அணி முத்தின் சிவிகையினைத் "தாழுமுடல் இதுகொண்டு தாங்க ஒப்பரிய தவஞ்செய்தேன்" என்று கொண்டு, தாங்கி வந்த பெருநிகழ்ச்சி இவ்விரு பெருமக்களின் பெருமைகளை நன்கு விளக்குவதராகும் (1659 - 1661). |
95. | பாண்டிமாதேவியார் - குலச்சிறையார் இவர்களது பெருமைகளைப் பிள்ளையார் உரைத்தருளக்கேட்ட வாகீசர் அவ்விரு பெருமக்களையும் காணும்படி தமிழ்நாடு காண்பதற்கும் மனங் கொண்டருளினது அடியார் பெருமையினை விளக்குவதாகும். (1664 - 1665). |
96. | தொண்டை நாட்டில் தாம் வணங்கிய பெருமைகளைச் சொல்லி அங்கு அணைந்து இறைஞ்சிப் பாடும்படி அரசுகள் பிள்ளையாருக்கருள அதன்படி அவர் எழுந்தருளியது பின் நிகழும் பெருநிகழ்ச்சிகளின் பொருட்டுத் திருவருளால் உளதாயிற்று (1666). |
97. | திருவாலவா யிறைவர் திருந்தியநூற் சங்கத்தில் இருந்து தமிழாராய்ந் தருளிய அங்கணராய்ச் செழும்பொருணூல் தருவார் (1668). |