பக்கம் எண் :


764திருத்தொண்டர் புராணம்

 

68.

திருப்புகலூரில் ஆளுடைய அரசுகளும் ஆளுடைய பிள்ளையாரும் முருகநாயனாரது திருமடத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில், சிறுத்தொண்ட நாயனாரும் திருநீல நக்க நாயனாரும் சீரடியார் பலரும் எழுந்தருளி உடனாக உறைந்து, திருத்தொண்டினிலையுணர்ந்து நிகழ்ந்தும், திருப்பதிகச் செந்தமிழின்றிறம் போற்றியும், திருத்தொண்டர் பெருமையினை விரித்துரைத்தும் ஒருப்படு சிந்தையினர்களாய் உடனுறைவின் பயன் பெற்ற சிறப்பு அடியார்கள் மனத்துட் கொண்டு வழிபடற்பாலது (1508 - 1509).

69.

சிவபெருமானைச் சேராதார் தீங்கு நெறிக்கே சேர்கின்றார் என்பது உய்வு நெறி (1518).

70.

பரமனார் அளித்த படிக்காசு பரமனடியாரானார்க் கழுதூட்டப் பயன்படுத்தத் தக்கது (1524).

71.

கைத்தொண்டாகு மடிமையினாற் பெறுங்காசு வாசிபடாது பெறத் தகுந்தது (1525).

72.

இறைவரது மறைகளாற் பூசிக்கப்பட்டுத் திருக்காப்பிடப்பட்ட திருவாயில் அம்மறைகளோதவல்ல அன்பர்களாலே திறக்கப்படற்குரியது (1531).

73.

"பண்ணினேர்மொழி யாளுமை" என்ற பாடலின் பயனைத் துய்ப்பதற்காக, "எண்ணீர் இரக்க மொன்றிலீர்" என்று நாயனார் வருந்திப் பாடுமளவும் கதவந் திறத்தலைத் தாழ்த்தனர் இறைவர். இது தெய்வப்பாடற்றிறம் (1533).

74.

தாம் பதினொரு பாட்டுப் பாடி அரிதில் "இரக்க மில்லீர்" என்று தம் பெருமானை வலிந்து பாடிக் கதவம் திறப்பிக்கவும், எடுத்த பாட்டில் பிள்ளையார் எளிதில் அடைப்பித்தது கருதி "நம்பர் திருவுள்ளமறியாது அயர்ந்தேன்" என்று அஞ்சிக் கவின்றனர் அப்பர் பெருமான். சிவபெருமான் திறத்தில் தாம் சிறிதும் பிழைபாடில்லாதபோதும் இவ்வாறஞ்சுவது எந்தம்பெருமக்களது சால்பு (1540).

75.

அடியார்கள் பிழையஞ்சியபோது வெளிப்பட்டுவந்து வரவேற்றழைத்துக்கொண்டு காட்சி கொடுத்தருளுவது சிவபெருமானது பெருங்கருணைத் திறம் (1541 - 1546).

76.

வன்றொழிலோர் செயலை மாற்றிச் சைவ நெறி விளங்கச் செய்ய வல்லது தெய்வத் திருநீறு (1551).

77.

"அப்பரே!" என்றழைத்ததற்கேற்பப், பிள்ளையார்பால் தந்தையின் அன்பு பூண்டொழுகிய நாயனாரது பேரன்பின்றிறம் கண்டு போற்றத் தகுந்தது (1552 - 1554).

78.

பழையாறை வடதளியில் இறைவர் தமது திருவுருவங்களை அமணர் மறைத்துத் தமது பாழியாக்கிக் கொண்டபோது எல்லாம் தாமேயாகும் தன்மையால் அவ்வாறே அமர்ந்திருந்தருளினர்; அப்பர் பெருமான் வண்ணங்கண்டு வணங்க வரங்கிடந்தபோது அவர் வேண்டியவாறே வெளிப்பட்டனர். சைவத்திறத்தின் முற்றிய முழு நிலைகள் இங்குக் காணத்தக்கன (1561 - 1565).

79.

தாம் கருதியபடி திருவருள் பெறும்பொருட்டுத் திருமுன்பு உண்ணாவிரதம் கிடத்தலும் தொன்றுதொட்டு நிகழும் நமது ஆன்றார் வழக்கு (1561).