பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்763

 

53.

புறச் சமயச் சார்புபற்றித் தொடக்குண்ட உடலைத் தரிப்பதானால் அது சிவனது இலச்சினையினாற் புனிதம் செய்யப்படுதல் வேண்டும் (1415).

54.

மக்களொழிந்த ஏனைப் பறவை முதலியவையும் பழக்கத்தால் சிவவோசை முழக்கிச் சிவானுபவத்தில் ஈடுபடுதலும் இயல்பு (1424 - 1426).

55.

இறைவன் திருமுன் வழிபடுதல் மன முதலாயின மூன்றும் ஒன்றித்து நிகழத் தக்கது (1432).

56.

திருத்தில்லைக் கூத்தனைத் தினைத்தனைப் பொழுதும் மறந்தால் மக்களுக்கு உய்தியில்லை (1439).

57.

சிவனருள் வெளிப்படக் கேட்ட பெரியோர்களைக் கண்டு வழிபட விரும்புவது மெய்யடியாரிலக்கணம் (1443 - 1445).

58.

ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் கூடிக்கோயில் சேர்ந்ததனுக்கு அருட் கடலும் அன்புக் கடலும் எனவும், சைவத்தின் கண்களிரண்டுடெனவும், இறைவனருளும் இறைவியருளும் எனவும் உவமிப்பதையல்லது வேறு சொல்லத் தக்கதன்று (1450).

59.

கூற்றுவன் வந்து உயிர்கொண்டு போவதன்முன் இறைவரது திருவடிகளைத் தம் முடி சூட்டிக்கொள்ள வேண்டுமென்று குறையிரந்து விண்ணப்பித்துக் கொள்ளுதல் பெரியோரியல்பு (1459).

60.

பெரியோர்களைக் காணப் பெறுதலின்றியும் அவர்களது தன்மைகளைக் கேட்ட மாத்திரத்தே அவரிடத்து அன்பு பூண்டொழுகுதல் உண்மையன்பர்களியல்பு (1468).

61.

தாம் செய்யும் தருமங்களையும் தமது உயிர்ச்சார்பு பொருட்சார்புகளையும் தமது உயிர்ப் பற்றாகிய பெரியோர் பெயரால் வழங்கும்படி செய்தல் அன்பரியல்பு (1466).

62.

இறைவரது சீர்பாடத் தீவிடமும் நீங்கும் (1473).

63.

நாயனாரது திருவாக்கினால் தமது மகன் விடம்நீங்கி உயிர்பெற்றெழுந்தது கண்டும் அதற்கு மகிழாது, நாயனார் திருவமுது செய்வதற்குச் சிறிது இடையூறாக இவன் நின்றான் என்பது பற்றி வருந்தி வாடினார் அப்பூதி நாயனாரும் அவர்தம் மனைவியாரும். இது பேரன்புடையோரியல்பு (1474).

64.

அப்பூதியடிகள் நமிநந்தியடிகள் இவர்களது அன்பின்றிறம் இறைவனைப் பாடும் திருப்பதிகத்துள் வைத்துப் போற்றத் தகுந்தது (1476 - 1492).

65.

அடியவர்வணக்கத்தின் பெருமையை இயல்பாகப் பெற்றுடையது திருவாரூர் (1483 - 1485).

66.

சிவபெருமானைத் தொழாதொழிந்து வேறு செய்வதெல்லாம் கனியிருக்கக்காய் கவர்தல் முதலியனபோல வாகும். இவ்வாறெண்ணி யெண்ணித் தமது பிழைக்கஞ்சி யிரங்குவது பெரியோர் தன்மை (1489).

67.

திருவாரூர்ப் பெருமானது திருவாதிரைத் திருவிழா பரமாசாரிய மூர்த்திகளால் விரும்பிக் கண்டு போற்றப்பட்ட பெருஞ் சிறப்புடையது (1500 - 1501).