35. | சிவத் தொண்டு மனம் - வாக்கு - காயம் என்ற மூன்றும் ஒன்றித்து நிகழும்படி செய்யத் தகுந்தது (1342). |
36. | பொறாமைகொண்டு தன்னலமும் சூழ்வோர் பொய்ம்மையும் கொலையும் முதலிய இழிதொழிலிற் றலைப்படுவர் (1344 - 1348). |
37. | சிவனுக்காட்பட்டோர் வேறு யார்க்கும் குடியல்லா வீரர் ஆவார்கள். அவரே "அஞ்சுவதி யாதொன்று மில்லை; அஞ்ச வருவது மில்லை" என்று துணிந்து கூறவல்லவர் (1358). |
38. | சிவனடியார்களுக்கு வரும் இடையூறுகளையும் துன்பங்களையும் சிவனே உடனின்று தீர்ப்பான் (1359). |
39. | சிவனது நீழலில் அழுந்திநிற்கும் அடியவர்க்குத் தீயும் குளிர்ந்து நிற்கும் (1362 - 1363). |
40. | நஞ்சமுது செய்தருளிய நாதன் என்று அமையும் உறைப்புடைய அடியவர்க்கு நஞ்சும் அமுதாகும் (1369). |
41. | களிற்றுரி போர்த்த கடவுள் என்று கடைப்பிடித்த அன்பரைக் களிறு துன்புறுத்தாது அகலும் (1381). |
42. | சிவனடியார்களைத் துன்புறுத்தும் வகைகளைச் செய்வோர் அவைகளாற்றாமே துன்புறுத்தப்படுவர் (1383 - 1384). |
43. | கல்லிற் பிணித்துக் கடலிற் புகவிட்டாலும் காக்க வல்லது திருவைந்தெழுத்தாகிய சிவநாமம் (1391). |
44. | மலக் கல்லில் வினைப் பாசத்தாற் கட்டப்பட்டுப் பிறவிக் கடலில் வீழ்மாக்கள் ஏறிட அருளுவதும் ஐந்தெழுத்தேயாம் (1394). |
45. | சிவனடியார்களுக்குப் பணி செய்யும் பேற்றினைத் தேவர்களும் முன்னைத் தவஞ் செய்தே பெறுவர் (1395 - 1396). |
46. | இறைவர், அடியார்களுக்கு எஞ்ஞான்றும் எவ்விடத்தும் தோன்றாத் துணையாய் உடனிருந்து அருள் புரிவர் (1399). |
47. | இறைவர் அடியார்களுக்குத் தாயும் தந்தையும் ஆகி உடனிருந்து அருள் புரிவர் (1399). |
48. | கடவுளருளாற் பகை கடந்தேறிய பெரியோரை உலகம் போற்றும் (1402). |
49. | இறைவரது திருவடியையே நினைந்து உள்ளன்பினால் உருகிக் கண்ணீர் வார நிற்பதும், தாழ்வடமும் திருநீறும் மெய்யார அணிதலும், இடைவிடாது வாயார வாழ்த்துதலும் என்ற இவை தம்மை மறந்த மெய்யன்பர் நிலை (1405). |
50. | இறைவரருள் பெற்று மெய்யுணர்வு வந்தபோது முன்னம் அவரை இகழ்ந்து மறந்திருந்தமைபற்றி இரங்குதல் பெரியோர் செயல் (1408). |
51. | துட்டரது சொற் கேட்டுத் தீங்கு புரிந்து மன்னவரும் பின்னர் உண்மை தெரிந்து தமது தவற்றை உணர்ந்தபோது இரங்கி அதற்குக் கழுவாய் விதித்துக் கொள்வர் (1410 - 1411). |
52. | சிவத் தல யாத்திரை செய்து வழிபடுதல் மக்கட் பிறவிப் பயன்றருவதாம் (1412). |