30. அடியார்கள் அவதரித்துப் பணி செய்த புண்ணியத் தலங்களைக் காலால் மிதித்து நடத்தற்கும் அஞ்சுவர் பெரியோர். (1771 - 1778). 31. இறைவரிடம் வேண்டிப் பெறும் நல்வரங்களாவன பிறவாமையும் அவரை மறவாமையுமேயாம். என்றும் மீளாது சிவனது ஆனந்த நிறைவினுள் அடங்கி அம்மகிழ்ச்சியினுள் அமிழ்ந்து கிடத்தல் முத்தி நிலையாம். அதனையே குறிக்கொண்டு பெற முயலுதல் அறிவு பெற்ற உயிர்களின் கடமை. 32. அடியார்களிடத்தும் சிவலிங்கத்தினிடத்தும் தம்மைக் கண்டு மறவாது பேணுபவர்களை இறைவர் காத்து இறவாத இன்பம் தந்து தம் மலரடிக்கீழ் வைப்பர். _______தலவிசேடம் :- 1. காரைக்கால் - இத்தலம் அம்மையார் அவதரிக்கப் பெற்ற பெருமையுடையது. இது சாகம்பரி தேவியின் பெருமை விளங்கும் தலமாதலின் சாகம்பரி புரம் எனப்படும் என்றும், சுவாமி கைலாசநாதர் எனப் பெயர் பெறுவர் என்றும் வடமொழிப் பிரமாண்ட புராணம் கூறும். இவ்வடமொழிப் புராணம் திருத்தொண்டர் புராணத்தின் பின்னர் அதிற்கூறும் சரிதத்தைச் சிறப்பற்ற சில மாறுதல்களுடன் மொழி பெயர்க்கப்பட்டதென்று கருத இடமிருக்கின்றது. அதனுள் தனதத்தன் மனைவியின் பெயர் தருமவதி என்றும், அம்மையார் பெயர் பூதவதி யென்றும், அவர் கணவன் சென்று சேர்ந்த பாண்டி நாட்டுப் பட்டினம் தசமிரபன்னி யாறு கடலொடு கூடுமிடத்துக்கு அணிமையில் உள்ள கனகலம் என்னும் தலமென்றும் கூறப்படும். இன்னும் சில விவரங்களும் காணப்படுகின்றன. காரைக்கால் சோழ நாட்டுத் தலம். கடற் றுறைமுகப் பட்டினம். அம்மையார் கோயிலும் திருவுருவங்களும் புதுமையும் அழகும்பெற அமைக்கப்பட்டுள்ளன. அம்மையார் பூதகணமாகிய பேய் வடிவம் பெற்றுச் கயிலாயம் சென்ற தலம் பாண்டி நாட்டில் ஓர் பட்டினமாதலின், காரைக்கால் நகரில் அத்திருநாள் அதிகமாகக் கொண்டாடப்படாமல் அவர் அடியார்க்கு மாம்பழத்தோடு அமுதருத்தியபின் கணவன்கேட்டபடி திருவருளால் அதிமதுரக்கனியை அளித்துக் கொடுத்துத் தெய்வத் தன்மை விளங்க நின்ற திருநாள் மாம்பழத்திருநாள் என்ற பெயராற் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இது மாயவரம் (மாயூரம்) - தரங்கம்பாடி இருப்புப்பாதை வழியில் காரைக்கால் என்ற நிலயத்தினின்றும் நாழிகை யளவில் அடையத்தக்கது. மாயூரத்தினின்றும் மோட்டார் பஸ் வசதியும் உண்டு. 2. திருவாலங்காடு - பழையனூர்த் திருவாலங்காடு என்ற தலைப்பில் 1607ஆம் பாட்டின்கீழ் தலவிசேடம் பார்க்க. (பக்கம் III - 579). |