பக்கம் எண் :


912திருத்தொண்டர் புராணம்

 

சேர்க்கை:- I

அற்புதத் திருவந்தாதி

காரைக்காலம்மையார் அருளிச்செய்தது

1பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

1

பிறந்து மொழி சொல்லத் தொடங்கிய காலம் முதல் எக்காலமும் உனது திருவடியினையே சேர்ந்தேன்; இறைவரே! எனது துன்பந் தீர்ப்பதுதான் எப்போது? இவ்வாறு துணிந்து சொல்லுதல் வேறு யாவர்க்கும் அரிது. இது முன்னைத் தவத்தால் ஆவது. "அடிதளர்வுற் றசையுநடைப் பருவத்தே....... பணியணிவார் கழற்கடிமை பழகி.......காதல் ததும்பவரும் மொழி பயின்றார்" (1719) என்றும், "வண்டல் பயில்வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை யண்டர் பிரான் றிருவார்த்தை யணைய வருவன பயின்று" (1721) என்றும் வரும் புராணத் திருவாக்குக்கு இது (அம்மையார் திருவாக்காகிய) அகச்சான்றாகும். சேர்ந்தேன் - இடைவிடாது மனம் மொழி மெய்களாற் சார்ந்தேன் என்ற பொருளில் வந்தது. இடர் - பிறவித் துன்பம். அம்மையார் திருவருளை வேண்டிப் பேய்வடிவம் பெற்றவுடன் முதலிற் பாடியருளிய இத்திருவந்தாதியில் இது முதல் திருவாக்கு. "பிறவாமை வேண்டும்" (1776) என்ற கருத்தை ஈண்டுக் கருதுக. மைஞ்ஞான்ற......பெருமான் வானோரைக் காத்தது போல எனக்கு மருள்வான் என்பது குறிப்பு.

1

1இடர்களையா ரேனு மெமக்கிரங்கா ரேனும்
படரு நெறிபணியா ரேனுஞ் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடு மெம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு.

2

எமது பெருமான் எனக்குப் பிறவித்துன்பத்தை நீக்கலாம் - அவ்வாறு நீக்காவிடினும் விடுக; என்மேல் இரக்கம் வைக்கலாம் - அது செய்யாவிடினும் விடுக செல்லும் நெறியினையேனும் பணிக்கலாம் - அதுவும் செய்யாவிடினும் விடுக; என் நெஞ்சு அவர்பால் அன்பு நீங்காது.

இடர்களைதல் முதலிய பயன் கருதி, யான், அன்பு, செய்யவில்லை என்பது அன்பு செய்தலே அதற்குப் பயனாம்; வேறில்லை என்பதாம். "வீடும் வேண்டா விறல்" என்பது திருக்கூட்டச் சிறப்பு. எமக்கு - உயிர்களை உள்ளடக்கிய உளப் பாட்டுத் தன்மைப் பன்மையாதலின் என்நெஞ்சு என்பது ஒருமைப்பன்மை மயக்கம்மன்று. அவர்க்கு - குவ்வுருபு ஏழனுருபின் பொருளில் வந்தது; கிழங்கு மணற் கீன்றமுளை என்பதுபோல.

2

1அவர்க்கே யெழுபிறப்பு மாளாவோ; மென்றும்
அவர்க்கேநா மன்பரவ தல்லாற் - பவர்ச்சடைமே
பாகாப்போழ் சூடு மவர்க்கல்லான் மற்றொருவர்க்
காகாப்போ மெஞ்ஞான்று மாள்.

3

 1.

இக்குறியிட்ட பாட்டுக்கள் பாடஞ் செய்யத்தக்கவற்றுட் சில.