| அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல்; பரவித் தொழுதிரந்தோம் பன்னாண்; - முரணழிய வொன்னாதார் மூவெயிலு மோரம்பா லெய்தானே! பொன்னார மற்றொன்று பூண். |
27 முப்புரமெரித்த இறைவரே! உம்மைப் பலநாளும் இரந்து வேண்டிக் கொள்வது ஒன்றுண்டு; உமது திருமேனியில் ஒரு பாம்பினை நீர் பூணுதல் வேண்டா!; வேறொரு பொன்னாரம் பூண்டுகொள்வீராக. 8 - 22 பாட்டுக்களிற் குறிப்பிற்கூறிய பொருளை வெளிப்பட வேண்டுகையாகக் கூறியது. பிரானுக்கும் அம்மை என்ற அன்பின்றிறம் வெளிப்படக் காண்பதாம். மேல்வரும் பாட்டும் பார்க்க. 27 பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேன்மிளிர நன்கமைத்துக், - கோணாகம் பொன்முடிமேற் சூடுவது, மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக விவர்? 28 இவர் ஒரு நாகத்தைப் பூணாக அணிந்தும், ஒன்றைப் புலித்தோலின்மேற் கச்சாகக் கட்டியும் ஒன்றைத் திருமுடிமேற் சூடியும் இவ்வாறு நாகங்களை எங்கும் அணிந்து கொண்ட இச்செயல் ஏழையாகிய எனக்கு என்ன விளைவிப்பதற்கோ அறியேன் என்று, தாயின் இரக்கத்துடன் கூறியது. இவர், நாகம், ஒன்று பூணாகப் புனைந்ததும், ஒன்று புலி அதளின் நாணாக அமைத்ததும், (ஒன்று) முடிமேற் சூடுவதும் எல்லாம் எனக்கு என் முடிவதாகவோ என்க. எல்லாம் - இவையும் மற்றும் இவைபோல்வனவும். அதளின் நாண் - இடையிற் கட்டிய புலித்தோல் நழுவாமல் இறுகக் கட்டும் கயிறு. பொறியிலி - பொறி -கண்டு நன்மையிற் றங்கும் ஊழ் என்ற பொருளில் வந்தது. பாம்புகளினால் அவர்க்கு வரும் கேடு தமக்கேயாம் என்ற பதைப்புடன் கூறியது. 28 1இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடிபூசி யென்பணிந்த பேய்க்கோலங் கண்ட பிறர். 29 பொடிபூசி எலும்பணிந்த இவரது பேய்க்கோலம் கண்ட பிறர் இவரைப் பொருள் உணரமாட்டாதார் எல்லாம் இவரை இகழ்வதே!; இகழலாமோ? (இகழ்தல் செய்யத் தக்கதன்று). பொருள் உணர்தலாவது பொடிபூசுதலால் என்றும் அழிவில்லாதவர் என்றும், பேய்க்கோலத்தால் ஆனந்தம் தருபவர் என்றும் காணும் உண்மைப் பொருளை அறிதல்; பூக்கோல மேனி - தாமரைபோலும் அழகி, சிவந்த திருமேனி; பிறர் - இகழ்வாராதலின் நமரல்லாது புறம்பாயினார்; "உணரா ருணரார்......கேளாம் புறன்" (போதம்). பொருளுணர்ந்தவர் இகழாது போற்றுவர் என்பதாம். இவர் - என்றது தாம் நேரிற் கண்டு நின்ற பெருமான் என்ற அணிமைச் சுட்டு. 29 1பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே! பிறரறியும் பேருணர்வுந் தாமே!-பிறருடைய |