| இங்கிருந்து சொல்லுவதெ னெம்பெருமா னெண்ணாதே யெங்கும் பலிதிரியு மெத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவது மென்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று. |
25 அவரைக் காணாத நலையில் இவ்விடத்திருந்து இவ்வாறு சொல்லுவதெவன்? எம்பெருமான் எண்ணாது எவ்விடத்தும் பலிதிரியும் எல்லாத் திறங்களும் இரவில் சுடுகாட்டில் ஆடுவதும் எதன்பொருட்டு என்று அவனைக் காணும் பொழுது ஆராய்வோம். இங்கு - தவக்குறைவினால் அவன் காட்டப்பெறாத இந்தப் பெத்த நிலையில்; சொல்லுவதெவ்வாறு? வினா இவ்வாறு என்று இன்மை குறித்தது; எண்ணாதே - தமது பெருமையினையும் உயிர்களது சிறுமையினையும் ஒரு சிறிதும் எண்ணாமல்; எத்திறம் - அவ்வவர் தகுதிக்கேற்ப என்றபடி; இரவு - சங்கார காலம். ஈமம் - உலகம் சங்கரிக்கப்பட்ட இடம். ஆடுதல் - உலகம் மீள உளதாதற் பொருட்டுச் செய்யும் நடனம். "வருங்கடன் மீளநின் றெம்மிறை நல்வீணை வாசிக்குமே" (தேவா). பலிதிரிதல் - வினைப் பயன்களைச் சிவனுக்கென்று கொடுக்க ஏற்றல். காணலுற்ற ஞான்று - அவள் கண்டு காட்டக் கண்ட முத்தி நிலையில். "காணவுள்ளத்தைக் கண்டு காட்டலின்" ஆராய்தல் - அநுபவத்தில் அழுந்தியறிதல். "அயரா அன்பின் அரன் கழல் செலுமே." 25 ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோன் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே யக்கயலே தோன்று மரவு. 26 (உமையம்மையாரது) தொங்கும் குழற் சடைகள் பொன்னாலியன்ற வரைபோல மின்னுவனபோன்று உள்ள சிவபெருமானது அழகிய மார்பினிடத்து, எங்கும் மிக்கு அயலில் எலும்பு மாலைகளின் பக்கத்தில் தோன்றும் அரவு விளங்கும். குழற்சடைகள் - குழலாற் பின்னி யியன்ற சடைகள்; இவை உமையம்மை யாருடையவை; போன்ற - போன்றமைந்த; போன்ற - மார்பு - என்று கூட்டுக. பொன்வரை - பொன்னின்மேற் கீறிய கீற்றுக்கள்; பொன்மார்பு - அழகிய மார்பு. பொன்போன்ற மார்பு என்றலுமாம். குழற்சடைகள் பொன்வரைகள் போல மின்னுதற் கிடமாகிய மார்பில் அவற்றுக்கு அயலில் அக்கும் அரவும் மிளிருமே என்க. சடைகள் - உமையம்மையார் - கங்கையம்மையார் ரிருவரது குழலும் சடையும் என்றும், ஒருமைப் பன்மை மயக்கென்றுகொண்டு உமையம்மையாரது சடை என்றும் கொள்ளலாம். சிவபெருமானது பொன்மார்பில் உமையம்மையாரது குழற்சடைகள் பொன்னின்கண் திரித்து வரை கீறியனபோல மின்னி அழகு செய்தமர்ந்தன; அதற்கயலில் எலும்புமாலையின் பக்கத்துவைத்த பாம்பு மிக்குத் தோன்றும்படி விளங்கி ஒளிவீசும் மிடற்றானது மார்பில் குழற்சடைகள் மின்னுவன. ஆயினும் அவற்றின் மிக்குத் தோன்ற அக்குமாலையின் பக்கம் உள்ள அரவு விளங்கி மிளிருமே என்க. அம்மையாரது கவின்விளக்கம் ஐயனது அழகினுள் அடங்கும்படி அவ்வழகு மேல் விளங்கும். தோன்ற - தோன்றும்படி. குழற்சடையைக் கரும்பாம்புக்கு உவமிப்பது மரபு. பொற்பாம்பணிகள் குழலில் சூட்டுவதும் மரபு : 49, 50, 58 பாட்டுக்கள் பார்க்க. 26 |