பக்கம் எண் :


அற்புதத் திருவந்தாதி943

 

எரியாடி யென்றென்று மின்புறுவன் கொல்லோ
பெரியானைக் காணப் பெறின்.

85

யாவரினும் பெரியானாகிய சிவபெருமானை நான் காணப் பெற்றால், என் கண்ணாரக் கண்டும், கைகளாரக் கூப்பித்தொழுதும் மணமார எண்ணியும், வாயார ஏத்தியும் எப்போதும் இன்பமடைந்திருப்பன்.

காணப்பெறின் - கயிலையில் இறைவரைக் காணச் செல்கின்றாராதலின் இவ்வாறு அருளிச்செய்துகொண்டே செல்கின்றார். அம்மையாரது ஆர்வத்தின் அதிதீவிர நிலை யுணர்த்திற்று. ஆர்தல் - நிறைவு பெறாது பல முறையும் மீண்டும் மீண்டும் அவ்வச் செயலே செய்ய முயலும் மன எழுச்சி முற்றும் பெறுதல்; ஆராமை என்பர். "விண்ணோன்! எரியாடி! என்று" என்றதனால் வாயாரஎன்று கொள்ளப்பட்டது. பெரியான் - தனக்குமேற் பெரியரரில்லாதவன்; சிவன். "பிறவா யாக்கைப் பெரியோன்" (சிலப்.) இப்பாட்டால் இறைவர் திருமுன் வழிபட்டிருக்கும் நிலை கூறப்பட்டது. இதனை யாவரும் பயின்று அவ்வாறு ஒழுகின் நலம் தரும்.85

பெறினும் பிறிதியாதும் வேண்டே; நமக்கீ
துறினு முறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி
மற்றொருக ணெற்றியின்மேல் வைத்தான்றன் பேயாய
நற்கணத்தி லொன்றாய நாம்.

86

சிறிதே அறிவு விளங்கப் பண்ணி, அனற் கண்ணை நெற்றியினிடத்தே வைத்த இறைவரின் பூத கணங்களுள் ஒன்றாகிய நாம், இந்நிலை வந்துறினும் வந்துறா தொழியினும், இஃதொன்றனையே வேண்டுவதன்றி வேறெது பெற்றாலும் வேண்டோம்.

கணத்தி லொன்றாய நாம் - ஈதுறினும் - உறாதொழியினும் - பிறிது யாது பெறிதும் - வேண்டோம் என்று வினை முடிபு செய்க. உறினும் - உறாதொழியினும் என்றது கணத்தின் நிலையில் இனிப் பெற எண்ணிய இன்பமும் வரமும் ஆகிய பேருணர்வு குறித்தன. ஈது - நினைத்த இந்நிலை. பிறிது யாதும் பெறினும் வேண்டோம் என்க. பிறிது ஈதன்றிப் பிறிது. இறைவருக் காட்செய்யும் நிலையன்றி வீடும் வேண்டா விறல் சிறிதுணர்த்தி - பக்குவத்துக்கும் வினைநுகர்ச்சிக்கும் எற்றபடி உணர்த்துதல். சிறிதுணர்த்தி - என்றதனால் ஈது - என்றது இனித்தாம் வேண்டிய பேருணர்வின் வரும் இன்பம் என்றபடி. மற்றொரு கண் - மற்று வேறு எவர்க்கு மில்லாத என்பது குறித்து நின்றது. சிறிதுணர்த்தி நெற்றியில் கண்வைத்தான் - உணர்வு தருவது அஞ்ஞானத்தை எரித்துப் போக்கும் நெற்றிக்கண் என்பது. இதுபற்றி யன்றே ஒளி யுருவமாக இறைவரைப் பருவ நடுவில் அழுந்தியறியும்படி ஆகமங்கள் விதித்தன. பேயாய் நற்கணத்தி லொன்றாய நாம் - தாம் வேண்டிப் பெற்ற பேய்ப் பூதகண வடிவத்தில் இறுமாந்து நின்று கூறியது. இதனை ஆசிரியர் சரித அகச்சான்றாக எடுத்துக் காட்டி விதந்து கூறிப், "பொற்புடைச் செய்ய பாத புண்டரீ கங்கள் போற்று, நற்கணத் தினிலொன் றானே னானென்று நயந்து பாடி" (1768) என்றருளியது காண்க.

86

நாமாலை சூடியு நம்மீசன் பொன்னடிக்கே
பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர்
அறிவினையே பற்றினா லெற்றே தடுமே
யெறிவினையே யென்னு மிருள்.

87