இவர்கள் அனைவரையும் விட்டுப் பிரிந்து, நாடு, நகரம், ஆட்சி அனைத்தையும் கைவிட்டு வனத்திற்குச் சென்று 6 வருடம் அருந்தவம் செய்தார். அவருடைய 35 ஆவது வயதில் அவருக்கு ஞானோதயம் உண்டாயிற்று; உலகின் இயற்கை அநித்தியம் என்று கண்டார்; உலகில் ஒவ்வொரு பொருளுக்கும், ஒவ்வொரு பிராணிக்கும் ‘ஆன்மா’ என்று தனியாக ஒன்றில்லை என்று கண்டார். இவற்றை ‘அநித்தியம், துக்கம், அநான்மிகம்’ என்று சொல்வார்கள். உயிர்களின் துக்கத்திற்குக் காரணம் பிறப்பு, பிறப்புக்குக் காரணம் ஆசை, ஆசைக்குக் காரணம் அறியாமை(அவித்தை) என்ற விவரங்கள் யாவும் அவருக்கு விளக்க மாயின. ஆசைகளை அவித்து மெய்யறிவு பெற்ற நிலையில், அவர் தாம் சம்பந்தப்பட்ட மட்டில், அப்பொழுதே நிருவாணம் என்கிற முக்தி நிலையை அடைந்து விட்டார். அவர் ஞானமடைந்து நிருவாணம் பெற்ற இடம் புத்த கயையில் ஓர் அரசமரத்தடியில். உலகமக்கள் படும் துன்பங்களைப் பார்த்து, கருத்தில்லாமல் அவர்கள் சுயநல வெறியுடன் ஒடிச்சாடி மீளாத துக்கத்தில் ஆழ்வதைக் கண்டு, அவர் மனம் இரங்கினார். தாம் பெற்ற இன்பத்தை வையக மக்கள் அனைவரும் பெற வேண்டும் என்று அவருக்கு அருள் பிறந்தது. புத்த கயையிலிருந்து நேராகக் காசி நகருக்குச் சென்றார். அங்கே சாரநாத் என்ற இடத்தில் அவருடைய பழைய சீடர்கள் ஐவர் இருந்தனர். அவர்களுக்கு அவர் தாம் கண்ட தருமத்தை முதன் முறையாக உபதேசித்தார். இதைத் |