பக்கம் எண் :

 வினையியல் - நூற்பா எண். 22243

[வி-ரை:

எழுதப்படுவது எழுத்து - தொழிற்பெயர்.

எழுதப்பட்ட வடிவம் எழுத்து - பொருட்பொதுப் பெயர்.

எழுதப்பட்ட அகரம் முதலியன - சிறப்புப் பெயர்.

அகரம் முதலியவற்றின் ஒலி வடிவம் - ஆகுபெயர்.

அகரம் முதலியவற்றின் ஒலியிலக்கணம் - இருமடி ஆகுபெயர்.

அவ்வொலியிலக்கணம் கூறும் நூல் - மும்மடி ஆகுபெயர்.

எழுத்துக் கூறப்பட்டது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருமக்கருத்தா ஆதலும், எழுத்து அறிவித்தது என எழுத்திலக்கணம் கூறும் நூல் கருவிக்கருத்தாவாதலும் நான்மடி ஆகுபெயர் என்பது விளக்கப்பட்டது.]

இனி, முற்று எச்சங்களை விரிக்கின் பெருகுதலானும், தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களிலும், திருவள்ளுவர் முதலிய இலக்கியங்களினும் சிலசில விரித்தலானும் எழுதிலம். இங்ஙனம் வருதல் பற்றி ‘அளவிலை’ என்றாம். அநவத்தையோ (கணக்கிடற் கியலாதோ) என்பாரை நோக்கி ‘ஐந்து’ என்றாம். ஐந்தன்மேல் ஆறு ஏழ் முதலாகக் கொள்வாரும் சிலர். ஐந்தன்கீழ் நான்கு மூன்று முதலாகக் கொள்வார்கள் சிலர். அவர்களை நம்பற்க என்பது தோன்ற, அடக்குக என்னாது ‘அறிந்து’ என்றாம். அவர்கள் மதம் கூறி மறுக்கில் பெருகும். அதனால் அமைக.

[வி-ரை: தொல்காப்பியனார் முதனிலையைத் தொழிற்பெயர் என்றார். அவருக்கும் நன்னூலார் முதலாயினாருக்கும் வினையானது முற்று, பெயரெச்சம், வினையெச்சம் என்ற மூவகைத்தாதலே கருத்தாகும்.] 22

வினையியல் முற்றும்.