பக்கம் எண் :

 நூலமைப்பு5

ஓரியலில் அறிய விதி பிறிதோரியலில் ஒழிக்கப்படுதலும் உண்டு. ஓரியலுக்குள்ளும் ஒரு நூற்பாவிதியினைப் பிறிதொரு நூற்பா விலக்குதலும் கூடும். ஒரு நூற்பாவினுள்ளும் முன்னர்க் கூறிய விதி பின்னர் விலக்கப்படுதலும் உண்டு.

இவ்வாறாக நூல் இயற்றிய ஆசிரியர்தம் கருத்தினை உள்ளங்கொள்ளாது, உரையாசிரியர்கள் தத்தம் கருத்துப்பற்றி உரைவரைதலும் உண்டு. பாடஞ்சொல்லும் ஆசிரியர், உரைவாசகங்கட்கு உரை வரைந்தவர் கருத்தை உட்கொள்ளாது, தத்தம் கருத்தில் பட்ட பொருள்களைக் கூறுவர். ஒரே விதிக்குப் பல பெயர் இடப்படுதலும் உண்டு. ஒரே பெயருக்குப் பல விதிகள் அமைதலும் உண்டு. நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் மூவரும் முக்குணவயத்தான் முறை மறந்து கூறுவர். இவற்றை எல்லாம் எவர் பகுத்து அறிய முற்பட்டாலும், அவத்தை வசப்பட்டு. முறைமாறிப் பொருள் செய்யும் நிலையும் ஏற்படும். மதி நுட்பமோடு மிக்க கலை கற்பினும், ஊழ்வினை வயப்பட்டு, விதி விலக்கு இவற்றை உள்ளவாறு உணராது போதலும் உண்டு. ஆதலின், விதிவிலக்குகளை அளவிட்டு அறுதியாகக் கூறுதல் இயலாது. சொல்லின் கூட்டமும் பொருளின் கூட்டமும் எல்லையிட முடியாது பரந்துகிடப்பன. ‘விதி - விலக்கு - சொற்கூட்டம் - பொருட்கூட்டம் - என்ற நான்கனுள், சிறப்பான சிலவற்றுள்ளும் மறந்தவை போக எஞ்சியவற்றைக் கற்சிறார்களுக்குத் தொகுத்துக் குறிப்பிடும் இத்தொகுப்பு, ஒரு பெருநூலாகாது’ என்ற செய்தியை உட்கொள்ளும் சான்றோர்கள் இதன்கண் குறைகண்டு இகழார். முறையறியாக் கீழோர்கள் எதனையும் இகழ்ந்து கூறுதல் இயல்பாகும். இவ்வாறாக, இந்நூல் இயற்றப்பட்டதன் காரணம் விரித்துக் கூறப்பட்டுள்ளது.

அடுத்து, இந்நூலை அறிவதற்குரிய கருவிகள் பத்தனையும் கூறத்தொடங்குகிறார். ‘‘வடமொழி இலக்கணங்கள் சிலவாகவும், தொல்காப்பியம் பழைய செய்யுட்கள் ஆகிய இவற்றில் காணப்படும் இலக்கணங்கள் பலவாகவும் இந்நூலுள் கூறப்பட்டுள்ளன. புதிய செய்தி எதுவும் கூறப்படவில்லை. தொல்காப்பியம் திருக்குறள் முதலிய இலக்கண இலக்கியங்களில் வடமொழிமரபுகள் சிலவாயும், தமிழ்மரபுகள் பலவாயும்