பலபொருட்கு ஒருவடிவாகும் பதங்களை ஓசையொடு கூறுதல்: 126 நட, வா முதலிய முதல்நிலைத் தனிவினைகளை முற்றாக்க வேண்டில் எடுத்துச்சொல்லுக; முதல்நிலைத் தொழிற்பெயராக்க வேண்டில் படுத்துச் சொல்லுக. சுட்டு என்பதனை முற்றுகர முற்றாக்க வேண்டில் எடுக்க; குற்றுகரத் தொழிற்பெயராக்க வேண்டில் படுக்க. ‘நெறிநின்றார் நீடு வாழ்வார்’ என்பதனை முறையே பெயராக்க வேண்டில் எடுக்க; முற்றாக்க வேண்டில் படுக்க. செய்யும் என்பதை எச்சமாக்க வேண்டில் எடுக்க; முற்றாக்க வேண்டில் படுக்க. அம்பலத்தாடி என்பதனைப் பெயராக்க வேண்டில் எடுக்க; எச்சமாக்க வேண்டில் படுக்க. இவை போல்வன எல்லாம் பல பொருட்கு ஒரு வடிவமாகிய தனிமொழி. - 126 உரை. செய்யும் என்பதன் இலக்கணம்: 128 செய்யும் என்பது இருதிணைக்கும், ஆண்பாற்கும், பெண்பாற்கும், ஒருமைக்கும், பன்மைக்கும், முற்றிற்கும், எச்சத்திற்கும், நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் பொருந்தி நிற்கும். - 128 உரை பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தல்: 129 பொருள் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலாவது, முன்பே தனக்கு வேண்டிய பொருளைக்கருதிக்கொண்டு, பின்பு அப்பொருளுக்கு ஏறகச் சொற்பிரித்துச் சந்தி கூட்டுதல்; ‘தவரடி புனைந்த தலைமையோன்’ - இத்தொடருக்குத் தவருடைய அடியைப் புனைந்த அன்பிற் பெரியோன் என்றும், தவத்தோராலே தன்னுடைய அடியைப் புனையப்பட்ட அறிவிற் பெரியோன் என்றும் கூறுக. |