அதிகாரம் காரணமாகச் சொற்பொருள் உணர்த்தலாவது: 129 ‘கூடில் இன்பம், பிரியின் துன்பம்’ என்னும் தொடர் அகச்செய்யுட்கண் வரின், தலைவியைத் தலைவன் புணரில் அளவில் இன்பம்; ஓதல், பகை, தூது, துணை, பொருள் முதலியவற்றால் உடன்படாது நீங்கில் அளவில் துன்பம் என்றும், புறச் செய்யுட்கண் வரின், கற்றோருடன் கலை பயிலில் அளவுபட்ட இன்பம்; நித்தியம், நைமித்திகம், காமியம் முதலிய விரதங்களால் உடன்பட்டுப் பயிறல் ஒழியின் அளவுபட்ட துன்பம் என்றும் கூறுதல். - 129 உரை இவ்வாசிரியரே இந்நூற்பா அடிகளுக்கு இத்தகைய எடுத்துக்காட்டுக்களும், விளக்கங்களும் தாராதுஒழியின், இத்தகைய அருஞ்செய்திகளைத் திரிபின்றி உள்ளவாறு உணர்தல் இயலாது என்பது தேற்றம். பேரறிவோர் பிறருக்குச் செய்யும் வினைகளாக - நூலைப் பாடினான், உரையை எழுதினான் என்ற எடுத்துக்காட்டுக்களைத் தந்துள்ள இவ்வாசிரியராம் பேரறிஞர் பிறருக்குப் பயன்படல் வேண்டும் என்ற அருள் நோக்கத்தால் இந்நூலை உரையுடன் யாத்த பெற்றி உணரப்படும். |