ஆசிலா உயிர்க்குஅள் மாசிலா மணிப்பெயர் அம்பல வாணன்என்று உம்பரும் பரவ வருஞான தேசிகன் இருதாள் புனையும் அமிழ்தினும் இனிய தமிழ்வளர் நெல்லை உவாமுதிர் மதிக்கலை சுவாமி நாதன் தேசார் ஞானச் செல்வன் ஈசான தேவன் எனும்தே சிகனே. மதிவெயில்.......................அகத்தியமாமுனி:் விளக்கவுரை: மதியமும் கதிரும் வெளிப்படுத்தும் கதிர், தன்னைக் கடந்து பரவாதபடி உயர்ந்த விந்தியமலையை நிலத்தில் ஆழுமாறு அடக்கி, தம் வருகையால் தென்னிலத்தை வட நிலத்திற்கு ஒப்பாக்கி, உலகை ஏற்றத்தாழ்வு இலதாக்கி, உள்ளங்கையில் பெருங்கடலை அடக்கி ஆசமனம்செய்து, உயர்ந்தபொதிய மலையில் விருப்பொடு தங்கியிருந்த மேம்பாடுடைய அகத்தியப் பெருமுனிவர். தன்பால்.......................தருநூல்: வி-ரை: தம்மிடத்தில் அரிய தமிழை இன்பமாகப்பயின்ற புலவர் பன்னிருவருள் மேம்பாடுற்ற தலைமையினை உடைய தளராத பெருந்தவத்தை உடைய தொல்காப்பிய முனிவர் தம் பெயரால் நன்மக்கள் இன்புறுமாறு அருளிய நூல். உளங்கூர்....................உணர்ந்து: வி-ரை: உள்ளத்தில் பொருந்துவதற்குச் சார்பான உரையாகின்ற இளம்பூரணமும், ஒரு காலத்திலும் நீக்கும் நிலைமையில்லாத சேனாவரையமும், கற்றுவல்ல சான்றோர் தம் உச்சிமேல் வைத்துக்கொண்டு கொண்டாடும் நச்சினார்க்கினயமும் ஏனைய தமிழிலக்கணச் செய்திகளும் முழுதும் உளங்கொண்டு, |