பதினாறு, பதினேறு, ஆகிய இரண்டு பாடல்களும் நல்லழுசியார் என்பவரால் பாடப்பட்டவை. பதினாறு வையை நதியைப் பற்றியது; பதினேழு முருகனைப் பற்றியது. பத்தொன்பதாவது பாடலை இயற்றியவர் நப்பண்ணனார்; இது முருகனைப் பற்றியது. இருபத்தொன்றாவது பாடலின் ஆசிரியர் நல்லச்சுதனார் என்பவர். இது முருகனைக் குறித்தது. இந்தப் பாடல்களுக்குப் பத்து ஆசிரியர்கள் இசை வகுத்துள்ளனர். கண்ணகனார், கண்ணனாகனார், கேசவனார், நந்நாகனார், (நம்நாகனார்) நல்லச்சுதனார், நன்னாகனார், (நல்நாகனார்) நாகனார், பித்தாமத்தர், பெட்டகனார், மருத்துவனல்லச்சுதனார் என்பவர்கள் அப்பதின்மர். இவர்கள் சிறந்த இசைப் புலவர்கள் என்று எண்ணப்படுகின்றனர். திருமால் திருமாலைப்பற்றிய ஏழு பாடல்களிலே 1,2,3,4,13 ஆகிய ஐந்து பாடல்கள் பொதுவானவை; திருமாலைக் குறித்துப் பாடப்பட்டவை; எந்தத் திருப்பதியையும் குறித்துப் பாடப்பட்டவை அல்ல. திருமாலே முதற் பெருங்கடவுள்; எங்கும் நிறைந்தவர்; எல்லாமாயிருப்பவர் என்று பரத்துவங் கூறுகின்றன. இப் பாடல்களிலே திருமாலின் பெருமையைக் காணலாம். ‘‘அழல்புரை குழை, கொழு நிழல்தரும் பலசினை ஆலமும், கடம்பும், நல்யாற்று நடுவும், கால்வழக்கு அறுநிலைக் குன்றமும், பிறவும் அவ்வவை மேவிய வேறுவேறு பெயரோய்! எவ்வ யினோயும் நீயே (பா. 4. வரி 66-70) |