பக்கம் எண் :

சாமி. சிதம்பரனார்153

திருமாலிருஞ் சோலை வைணவத் திருப்பதியாகவே இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆதலால் பழமுதிர் சோலையென்பது திருமாலிருஞ் சோலை யெனல் பொருந்தாது. இதனைப் பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும் என்னும் நூலிலும் காணலாம்.

இருந்தையூர்

பரிபாடலின் இருபத்து மூன்றாவது பாட்டு இருந்தையூரில் உள்ள திருமாலைப் பாடியது. கடைச்சங்க காலத்திலே இது ஒரு பெரிய நகரமாக இருந்திருக்கவேண்டும். பரிபாடற் பாட்டிலிருந்து இவ்வுண்மை விளங்குகின்றது.

இருந்தையூரையடுத்து வளமுடைய மலையுண்டு; அவ்வூரில் சிறந்த தடாகம் உண்டு; அவ்வூரில் திருவிழா நடைபெறும்; நகரைச் சுற்றிலும் கழனிகள் உண்டு; அக்கழனிகளில் உழவுத் தொழில் நடைபெற்றது. அந்நகரத்தில் கற்றறிந்த புகழ் பெற்ற அந்தணர்கள் வாழ்ந்தனர். பல பண்டங்களையும் விற்பனை செய்யும் வணிகர் தெருவுண்டு; உழவர்களின் வீதியுண்டு. இச்செய்திகள் இப்பாடலில் காணப்படுகின்றன.

திருமால் கரிய நிறமுடையவர்; பாற்கடலிலே ஆதிசேஷன்மேல் பள்ளிகொண்டிருக்கின்றார்; அவருடைய கொடி கருடக்கொடி, பனைக்கொடி, கலப்பைக்கொடி, யானைக்கொடிகளும் அவருக்குண்டு. தேவர்களைக் காக்கும் பொருட்டு அவர் அசுரர்களுடன் போர் செய்தார்; பற்பல அவதாரங்கள் எடுத்தார்.

திருமால் தனது உந்தித்தாமரையிலிருந்து நான்முகனைப் படைத்தார். பன்றியாக அவதாரம் எடுத்தார்; தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது மோகினியாக வந்தார். பிரகலாதனைக் காக்கும் பொருட்டு நரசிம்மாவதாரம் எடுத்தார்.