யுடையவள்; அழியாத இயற்கை வனப்புடைய பதுமை போன்றவள்; என் உள்ளத்தை விட்டுப் போய்விட மாட்டாள்; என்றும் நிலைத்திருப்பாள். கால் பொருது இடிப்பினும், கதழ் உறை சிதறினும் உரும் உடன்று எறியினும், ஊறுபல தோன்றினும், பெருநிலம் கிளரினும், திருநல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத் தானே’’ (பா. 201) பொருந்திய மணம் இப்பொழுதிருப்பது போலப் பண்டைத் தமிழகத்தில் மக்களுள் பிறப்பினால் பேதம் பாராட்டும் வழக்கமில்லை. ஆனால், உள்ளவர், இல்லாதவர்-அதாவது செல்வர், வறியர் என்ற வேற்றுமைகள் இருந்தன. இதனால் ஒத்த செல்வமும், ஒத்த அழகும், ஒத்த பருவமும் உடையவர்களுக்குள் நடைபெறும் காதல் திருமணங்கள்தாம் சிறந்த திருமணங்கள் என்று கருதப்பட்டு வந்தன. இத்தகைய ஒற்றுமையுடையவர்களுக்குள் ஏற்படும் காதல்தான், நிலைத்து நிற்கும் காதல், என்றும் நினைத்துவந்தனர். ஒத்த திருவும், உருவும், பருவமும் உடையவர்களின் வாழ்க்கையிலே ஒற்றுமையும் இன்பமும் தவழ்ந்து விளையாடுவதைக் கண்கூடாகக் காணலாம். ஏறுமாறாக இணைக்கப்பட்டிருக்கும் தம்பதிகளுக்குள் அடிக்கடி பிணக்கும் குழப்பமும் சுழன்றடிப்பதைக் காண்கின்றோம். காதலனும் காதலியும் சம நிலையிலிருந்தால்தான் அவர்கள் இல்லறத்திலே இன்பங்காண்பார்கள். இவ்வுண்மையைப் பண்டைத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். இதனை ஒரு பாட்டு விளக்கிக் கூறுகின்றது. நாகரிகம் வளர்ந்திருக்கும் மருத நிலத்துச் செல்வன் ஒருவன், மருத நிலத்தைக் காட்டினும் சிறிது பின் தங்கிய |