பக்கம் எண் :

90எட்டுத் தொகையும் தமிழர் பண்பாடும்

இதனால் மனைவியின் உள்ளன்பைக் காணலாம். தனக்கு எது நேர்ந்தாலும், தன் கணவன் இனிது வாழ வேண்டும் என்று விரும்புகின்றாள். இதுவே அன்புள்ள மனைவியின் அருங்குணமாகும்.

பிரிந்து சென்ற கணவன் தன் வினையிலே வெற்றி பெற்றான். காதலியிடம் தான் திரும்பி வருவதாக வாக்களித்த கார்காலமும் வந்துவிட்டது. தனித்திருக்கும் காதலியைக் கண்டு அவள் கவலையை விரட்ட வேண்டும் என்னும் ஆவல் அவனைத் தள்ளுகிறது. அவன் தேரின் மேல் ஏறி விரைந்து வந்து கொண்டிருக்கின்றான்; அப்பொழுது அவன் தன் தேர்ப்பாகனிடம் விரைவாகத் தேரை ஓட்டும்படி கூறுகின்றான்.

‘‘குதிரைகளைப் பற்றிய நூல்களைக் கற்றறிந்த பாகனே! விரைவாக ஓட்டு.

பகைவர்க்குப் பயங்கொடுக்கும் நமது பழமையான ஊரிலே நீண்ட கொடிகள் அசைந்து பறந்து கொண்டிருக்கும்; வானை அளாவிய மதில் சூழ்ந்திருக்கும்; நள்ளிரவிலே காவல்காப்போர் நாட்டியிருக்கின்ற விளக்குகள் வானத்து நட்சத்திரங்களைப்போல ஒளி வீசிக்கொண்டிருக்கும்: சிறந்த பாதுகாவலையுடைய நகரம்.

இத்தகைய அழகிய நகரிலே அடக்கமுடன் இருப்பவள்: குற்றமற்ற அருந்ததிபோன்ற கற்புடையவள்: இரேகை படர்ந்த சிறந்த குளிர்ந்த கண்களையுடையவள்: மூங்கிலைப்போன்ற அழகிய தோள்களை யுடையவள்: தெய்வ மாதைப் போன்றவள்: என் காதலியான அரிவை இத்தகையவள்; அவள் மகிழ்ச்சியடையும்படி சென்று காண்போம்’’. என்பது இந்நூலின் 114வது பாடல்.