இப்பாடல் காதலனுடைய பிரியாத பேரன்பைக் காட்டுகின்றது. அவன் உடல் பிரிந்து போயிருந்தாலும் உள்ளம் அவளுடன் இணைந்தே யிருந்தது என்பதைக் காணலாம். இவ்விரண்டு பாடல்களாலும் காதலன் காதலிகளின் பிணைப்பின் பெருமையை உணரலாம். திருமணச் சடங்குகள் பண்டைத் தமிழகத்தில் ஆணும் பெண்ணும் தனியே சந்திப்பர். அன்பைப் பரிமாறிக் கொள்ளுவர்; வாழ்க்கை உடன்படிக்கை செய்துகொள்ளுவர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் வாழ்ந்து இன்புறுவர். நாளாவட்டத்தில் இம்முறையினால் சில குற்றங்கள் தலை காட்டத் தொடங்கின. ஆடவர்களிலே சிலர் வாக்குறுதியை மீறினர். காதல் மணம் புரிந்த மகளிரைக் கைவிட்டு வேறு பெண்ணை மணம்புரிந்தனர். அவர்கள் ஒழுக்கம் களவொழுக்கமாக இருந்ததால் ‘‘நான் அந்தப் பெண்ணுடன் வாழவில்லை; அவளை மணம்புரிந்து கொள்ளுவதாகவும் வாக்களிக்கவில்லை’’ என்று பொய் சொல்லவும் தொடங்கினர். இந்நிலைமை ஏற்பட்ட பிறகுதான் பெரியோர்கள் திருமணத்திற்கான சடங்குகள் சிலவற்றை உண்டாக்கினர். ‘‘பொய்யும் வழுவும் புகுந்த பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப’’ என்ற தொல்காப்பியச் சூத்திரம் இவ்வுண்மையைக் காட்டும். ஐயம்-தலைவர்; இது சமுதாயத் தலைவர்களைக் குறிக்கும். சமுதாயத் தலைவர்களால் ஏற்படுத்தப்படட திருமணச் சடங்குகள் யாவை என்பதை இரண்டு அகநானூற்றுப் பாடல்கள் அறிவிக்கின்றன. |