பக்கம் எண் :

  

முன்னுரை

சில நூல்களைச் சங்க நூல்கள் என்று சொல்லுகின்றோம். சங்க நூல்கள் யாவை? பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்பவை சங்க இலக்கியங்கள். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, ஆகிய பதினெட்டு நூல்களையும் மேற்கணக்கு நூல்கள் என்பர். இப்பதினெட்டும் சங்க இலக்கியங்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ளுகின்றனர். "கீழ்க்கணக்கு நூல்கள் சங்க இலக்கியங்கள் அன்று; சங்க காலத்திற்குப் பிற்பட்டவை" என்போர் பலர்.

பண்டைக் காலத்திலே மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தன; அவை ஒன்றன்பின் ஒன்றாக இருந்து மறைந்தன. அவற்றை முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறினர். முச்சங்க வரலாறு இறையனார் அகப்பொருள் உரையிலே காணப்படுகின்றது . சிலப்பதிகார உரையிலும் காணப்படுகின்றது.

"அகத்தியனார் முதல் 549 புலவர்கள் முதற்சங்கத்திலே இருந்தனர். இவர்களை உள்ளிட்ட 4449 புலவர்கள் அக்காலத்தில் செய்யுள் இயற்றினர். அவர்கள் பாடியன, பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை போன்றவை. இச்சங்கம் 4440 ஆண்டுகள் இருந்தது. காய்சினவழுதி முதல் 89 பாண்டியர்கள் இச்சங்கத்தை ஆதரித்து வந்தனர். இச்சங்கம் இருந்த இடம் கடல் கொண்ட மதுரை. இச்சங்கத்தார்க்கு இலக்கணம் அகத்தியம்.

இடைச்சங்கப் புலவர்கள் அகத்தியனார், தொல்காப்பியனார் முதலிய 59 பேர், அக்காலத்தில் 3700