பக்கம் எண் :

 101

ஹனிமேன் அந்த வீட்டின் எண்ணையும் வீதியின் பெயரையும் குறித்துக் கொண்டு, அங்கிருந்து காரைக் கிளப்பினான். நேப்பியர் பூங்காவின் எதிரே இருந்த காவல் நிலையத்துக்குச் சென்றான். இன்ஸ்பெக்டரிடம் ஹனிமேன் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, தீக்காயம் பெற்ற மாதுவைக் கைது செய்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கக் கோரினான். அந்த வீட்டைக் காண்பித்து, யார் அந்த வீட்டுக்குள் நுழைந்தாலும் கைது செய்ய வேண்டினான்.

ஹனிமேன், “சேரா, இப்போது திருப்திதானே?” என்று கேட்டான்.

சேரன் முகமலர்ச்சியுடன், “நன்றி” என்று கூறினான். கூறியபடி தன் கால் சட்டைப்பையில் கையை விட்டு ஒரு சாவியை எடுத்து ஹனிமேனிடம் கொடுத்தான். “இது அந்த முரடன் இருக்கும் அறையின் சாவி” என்றான். ஹனிமேன் அதையும் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்துவிட்டான்.

அடுத்த அரை மணியில், ஹனிமேனும், சேரனும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்தனர். போலீஸ் கமிஷனர் கதைகள் எழுதும் எழுத்தாளரும்கூட ! அவரே இப்போது ஹனிமேன் கூறிய சேரனின் கதையை வியப்போடு கேட்டுக் கொண்டிருந்தார்.

ஹனிமேன் ஒருவாறு அனைத்தையும் சொல்லி முடித்தான். கேட்ட போலீஸ் கமிஷனர் உடல் சிலிர்க்க, உள்ளம் சிலிர்க்க, “சேரா ! உன் சென்னைப் பயணம் சேரன் செங்குட்டுவனின் இமயப் பயணம் போல வரலாற்றில் நிலைக்கப் போகிறது. உனக்கு என் பாராட்டுக்கள்!” என்றபடி கையை நீட்டினார். சேரன் நாணத்துடன் கையைக் குலுக்கினான்.