பக்கம் எண் :

100 

விடுவதும் ஒரு குறை என்று பலர் கூறுவது ஹனிமேனுக்குத் தெரியும். எல்லாச் சூழ்நிலையிலும் இரக்கமற்ற அரக்கர் போல நடக்க முடியாத பண்பு, இந்தியரின் இரத்தத்தில் கலந்து விட்ட ஒன்று. இந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் அந்த மனிதப் பண்பு செழுமையாகவே வளர்ந்திருப்பதை ஹனிமேனால் உணர முடிந்தது.

“சேரா ! பயிர்த் தொழிலில் களை எடுப்பது முக்கியம். பயிரை வளர விடாமல் தடுக்கும்களைகளைப் பறித்து எறிவது பாவமல்ல ; பயிருக்குச் செய்யும் சேவை ; ஒரு முரடனைத் தீக்காயம் பெறுமாறு நீ தாக்கியது, ஒரு தேசத் தலைவரை நாளை கொலை செய்யப் போகும்நாச வேலையைத் தடுப்பதற்காக ! அதனால் வீணாக எதையோ நினைத்து வேதனையடையாதே!”

ஹனிமேன் தந்த விளக்கம் சரி என்று நினைத்தாலும் சேரனால் அமைதி அடைய முடியவில்லை. அவன், “சார் ! தீக்காயத்துடன் அறைக்குள் கிடப்பவனுக்கு மருத்துவ உதவி கிடைக்கச் செய்யுங்களேன் ! அதனால் என்ன தீமை நேரும்? ப்ளீஸ் !” என்று கெஞ்சினான்.

ஹனிமேன் ஒப்புக் கொண்டான். அதற்குக் காரணம், கருணையோ, இரக்கமோ அல்ல ! தீக்காயம் பெற்றவனைக் கைது செய்ய வேண்டும். அவனிடமிருந்து பல தகவல்கள் பெறவேண்டும். அதை அவசரத்தில் மறந்துவிட்டான். சேரன் வேண்டியபோது, ஹனிமேன், தான் மறந்த கடமையை நினைவு படுத்திக் கொண்டான். அவ்வளவு தான் ! ஹனிமேன் உடனே காரைச் சிந்தாதிரிப்பேட்டைக்குத் திருப்பினான். சேரன் வழி காட்டினான். கார் ஊர்ந்து சென்றது.

தான் அடைபட்டுக் கிடந்த வீட்டை ஹனிமேனுக்குக் காட்டினான், சேரன். வெளிக்கதவு, அவன் தப்பி ஓடிய போது மூடியபடியே இப்போதும் இருந்தது.