முன்னுரை “நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று உன்னையே கேட்டுக் கொள்.” இது, தனது நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த கென்னடியின் பொன்மொழி, பல்லாண்டுகளாக என் மனத்தில் பதிந்த இந்தப் பொன்மொழியை நாளைய தலைவர்களான இன்றைய சிறுவர்களின் உள்ளத்தில் பதிய வைத்தால் பலன் கிடைக்கும் என்று எண்ணினேன். அதனால் எழுந்தது. “ஒரு பூனை புலியாகிறது !” என்னும் இந்நாவல். கல்கி நிறுவனம் மீண்டும் ‘கோகுலம்’ இதழைத் தொடங்கியபோது, அதன் கௌரவ ஆசிரியரானார், குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா, அவர் விரும்பியபடி இந்த நாவலைத் தொடர்கதையாகஎழுதிக் கொடுத்தேன். 1984, டிசம்பர் முதல் 1985 நவம்பர் முடிய ஓராண்டுக் காலம்இத்தொடர் கதை கோகுலத்தில் வெளிவந்தது. தொடர்கதை வெளிவரும் போதே, கோகுலத்தின் கேள்வி-பதில் பகுதியில் என் முகவரி இடம் பெற்றது. அதனால் ஏராளமான இளம் வாசகர்கள் இத்தொடர் கதையைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதினார்கள். சிறுவன் சேரன், தமிழ்நாட்டுச் சிறுவர்கள் மனத்தில் நிலைத்து நின்று விட்டான் என்னும் உண்மையை உணர்ந்து மகிழ்ந்தேன். அந்த வாசகர்களுக்கு என் நன்றி. |