பக்கம் எண் :

 91

“முருகா !”

வாய் சொன்னது, கை தீக்குச்சியைத் தீப்பெட்டிமீது உரசியது.

‘சரக். ’

தீக்குச்சி பற்றி எரிந்தது. அதைத் தேதித் தாள்களில் பொருத்தினான். அவை எரிந்தன. அருகே இருந்த திரையும் தீக்கு இரையாக, செந்நிற ஒளி மேலோங்கி எழுந்தது.

சேரன், சன்னல் திரைகள் இரண்டையும் இரண்டு கைகளில் எடுத்துக் கொண்டான். அவற்றைத் தீயிலே பொருத்தி எரியச் செய்தான். அதன் பிறகுதான், “ஐயோ ! காப்பாத்து ! தீ ! தீ ! அறை தீப்பிடிச்சு எரியுதே !” என்று கத்தினான். கத்தியபடி நகர்ந்து அறைக்குப் பக்கத்தில் சுவரை ஒட்டி நின்று கொண்டான். அவன் கைகளில் இருந்த திரைகள் எரிந்து கொண்டிருந்தன.

வெளியேயிருந்து, ‘தீத்தீ’ என்ற குரல்கேட்டு உள்ளே வந்த மாது-அதுதான் எருமை மாடு அறைக்குள்ளே தீயைப் பார்த்ததும் பதறினான். உடனே சாவியை எடுத்தான் ; பூட்டில் பொருத்தினான்; திறந்தான் ; பூட்டைச் சாவியுடன் கீழே போட்டுவிட்டு அறைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான்.

கதவு திறந்து, எருமை மாடு உள்ளே வந்ததும், சேரன் தன் கையில் எரிந்து கொண்டிருந்த திரைகளை மின்னல் வேகத்தில் அவன்மீது எறிந்தான். ஒன்று மேல்துண்டு போல் அவன் தோளில் விழுந்தது ; மற்றொன்று அவன் தலையில் விழுந்து முகத்தை மறைத்தது. இரண்டு திரைகளின் தீயும் அவன் முடியை, உடையை, உடலைச்சுட்டன. அவன், ‘ஐயோ ! அம்மா’ என்று அலறுவதற்கு முன்னர் சேரன் அறையிலிருந்து வெளியே வந்தான். கண் மூடிக் கண் திறக்கும் நேரத்தில், அந்த அறைக் கதவை மூடித் தாளிட்