டான். அவன் ஓட முயன்றபோது, எருமை மாடு கீழே போட்ட பூட்டு அவன்காலில் இடறியது. சேரன் சாவியுடன் இருந்த அந்தப் பூட்டை எடுத்து, அறைக் கதவில் மாட்டிப் பூட்டினான். சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு அவன் வெளியே ஓடியபோதும் அவன் காதில், “ஐயோ அம்மா ! உடம்பு எரியுதே !” என்று எருமை மாடு அலறுவது கேட்டுக்கொண்டே இருந்தது. தீ செய்த உதவியால் தப்பி, வீட்டின் வாசலை அடைந்த சேரன், சட்டென்று நின்றான். வெளிவாசல் கதவை நிதானமாக மூடினான். பிறகு தெருவில் இறங்கினான். அவன் மனம் ஓட வேண்டும் என்று சொல்லியது. ஓட்டம் பிறர் கவனத்தைக் கவரும் என்று அறிவு எச்சரித்தது. சேரன் நடந்தான். அப்படியும் ஓட்டத்தின் பரபரப்பு அவன் நடையில் ஒட்டிக் கொண்டது. அந்தத் தெருவில் கிழக்கு நோக்கி நடந்த சேரன், பேருந்து செல்லும் சாலையைக் கண்டு இடப்புறத்தில் திரும்பி நடந்தான். திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான். கொஞ்ச தூரத்தில் ஒரு மருந்துக்கடை இருந்தது. அதன் முன்னே தெரிந்த மேசையின் மேல் சிவப்பு நிறத்துத் தொலைபேசி பளிச்சென்று அவன் கண்ணில் பட்டது. சேரன் நின்றான். மருந்துக் கடையின் படிகளில் ஏறினான். மேசைக்குப் பின்னே சுழல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவரிடம், “சார் ! ஒரு போன் பண்ணிக்கலாமுங்களா? கொஞ்சம் அர்ஜெண்ட்” என்றான். சுழல் நாற்காலிக்காரர், “பண்ணிக்கலாம், ஒரு கால் ஒரு ரூபாய். அர்ஜண்ட் ஆனாலும் சரி ! ஆர்டினரி ஆனாலும் சரி” என்று ஜோக் அடித்தார். |