பக்கம் எண் :

 93

“சரிங்க” என்றபடி சேரன் தொலைபேசியின் ரிசீவரைக் கையில் எடுத்துக் கொண்டான். மறுகையின் சுட்டு விரலால், அவன் நினைவில் நின்ற 693641 என்னும் எண்ணைச் சுழற்றினான். மறுமுனையில் ‘டிரிங் டிரிங்’ கேட்டது.

சேரன், “முருகா ! முருகா!” என்று வேண்டிக் கொண்டான். “முருகா! ஹனிமேன் அங்கே இருக்கச் செய், முருகா” - வேண்டுதல் தொடர்ந்தது.

நான்கு ஜோடி டிரிங்குக்குப் பிறகு, அது டக்கென்று நின்றது. சேரனின் ‘ஹலோ’வுக்கு,“யெஸ் ! உங்களுக்கு யார் வேணும்?” என்ற குரல் பதில் அளித்தது.

அந்தக் குரல் ஹனிமேன் குரல்தான் ! அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. இப்போது அந்தக் குரல் உண்மையில் தேன் குரலாக இனித்தது.

“சார், நீங்க ஹனிமேன்தானே?”

“யெஸ் ! நீ சேரன் ! சேரா, உன்னை யாரோ கடத்திட்டுப் போனாங்களாமே ! தப்பிச்சுட்டயா?”

“ஆமாம் சார் !”

“இப்ப நீ எங்கிருந்து பேசறே?”

அவன் அந்தத் தெருவில் நடந்து வந்தபோதே சில கடைகளின் பெயர்ப் பலகையைப் படித்துக் கொண்டு வந்தான். அதனால், “சாமித்தெரு - சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து பேசறேன் சார். நீங்க இங்க வர்ற வரைக்கும் நான் காத்திருந்தா, முன்னாடி மாதிரி நடந்துடலாம், சார்.”

மறுமுனையில் ஒரு நொடி மௌனம்.

பிறகு, “சேரா, பக்கத்திலே ஆட்டோ, டாக்ஸி ஏதாவது நிற்குதா?” என்று ஹனிமேன் குரல் கேட்டது.