இதற்கு என்ன செய்யலாம் என்று நரி எண்ணியது. சில மான்களைத் தன் வழிக்கு இழுக்கத் திட்டம் போட்டது. ஒரு நாள் பத்து மான்கள் மாடுகளுக்கு விட்டிருந்த புல்லை மேய்ந்து விட்டன. மாடுகள் வழக்கிட்டன. நரி மான்களை அழைத்தது. ‘நீங்கள் மாட்டின் புல்லை மேய்ந்து விட்டீர்கள். மன்னித்தேன். நீங்கள் அடிக்கடி என்னிடம் வந்து போக வேண்டும்’ என்றது. பத்து மான்களும் அடிக்கடி வந்து போகும். பச்சைப்புல் எல்லாவற்றையும் மாட்டுக்கும் இல்லாமல் மேய்ந்து கொள்ளும். நரி கேட்காது. ஒருநாள் பத்து மான்களைப் பார்த்துச் சொல்லுகின்றது நரி. அதோபார்! அந்த பேய்மரத்து நிழலில் ஒரு மான். அதை நீங்கள் கொம்பால் குத்தித் தொல்லை கொடுங்கள் என்றது. அப்படியே பத்து மான்களும் செய்தன. வேப்பமரத்து மான் நரியிடம் சொல்லியது. நரி வழக்கையே ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னொறுநாள் நாவல் மரத்தடியில் இருந்த நான்கு மான்கள் மேலும் நரி தன் பத்து மான்களையும் ஏவிற்று. நான்கு மான்களுக்கும் நல்ல அடி. நரியிடம் விண்ணப்பித்தன. நரி ஏற்றுக் கொள்ளவில்லை. காட்டில் உள்ள மான்கள் எல்லாம வருத்தப்பட்டன. நரி இந்த பத்து மான்களை ஏவி விட்டு நம்மைத் தொல்லைப்படுத்துகிறது என்று கூட்டம் போட்டுப்பேசின. தனி வகையில் நம் மேல் நரிக்கு இருக்கும் வருத்தத்தைப் பொதுவகையில் கிடைத்திருக்கும் அதிகாரத்தால் தீர்த்துக் கொள்வது அடாது என்று மனங் கொதித்தன. நரிக்குக் கருவியாகத் தன் இனமே அமைந்ததை எண்ணி எண்ணி எரிச்சல் அடைந்தன. அந்தப் பத்து மான்களையும் ஒரு நரியையும் எல்லோரும் சேர்ந்து ஒழித்துவிடலாமா என்று எண்ணின. பொது ஆட்சியின் அமைதியைய் கெடுக்க அவைகளுக்கு மனம் வரவில்லை. |