என்ற அடியைச் சொன்னார். அதைச் சொன்னார் என்றால் எதற்காகச் சொன்னார் என்பதல்லவா கேள்வி. காக்கைக்கு மிக்க வருத்தம் வந்துவிட்டது. அந்தப் புலவரின் விரிவுரையைக் கேட்டபோது யாரையோ பற்றிய பேச்சுக்கிடையில் நம் இனத்தை இழுத்துப்போட்டுப் பேசுவதாவது! காக்கை மிக்க எரிச்சலோடு இரைகூடத் தேடாமல் தன் அரசனிடம் ஓடியது. அரசே, நான் இந்தக் காட்டுக்குடி. என் பெயர் கடப்பாறை மூக்கன். நான் என் தனி முறையிலும், என் இனத்தின் தலைவன் என்ற முறையிலும் வழக்கிடுகிறேன். எனக்கும் என் இனத்திற்கும் ஏற்பட்டதாக நான் எண்ணும் மானக் குறைவுக்காக எதிரியை ஒறுக்க வேண்டும் என விண்ணப்பித்துக் கொள்ளுகிறேன். யானை-வழக்கு இன்னதென்றே கூறவில்லை; உம்! பட படப்பில்! அமைதியாகக் கூறும். கடப்பாறை-மன்னிக்கவும். பொதிகை மலைச்சாரலில் ஒரு வீட்டில் ஒரு புலவர்க்கும் மற்றொருவர்க்கும் பேச்சு நடந்தது. பேச்சுக்கிடையில் ‘கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக் காகத்தை என் செயப் படைத்தாய்’ என்று புலவர் சொன்னார். என்னையும் என் இனத்தையும் குறைவு படுத்தினார். எங்கள் ஒழுக்கம் தாழ்ந்தது என்பது அவர் சொற்களில் ஒலிக்கிறது. யானை-பார்ப்பனரின் செயல் பண்புகளும் உங்கள் இனத்தின் செயல் பண்புகளும் ஒரே தன்மை வாய்ந்தவை என்று கூறியுள்ளார் புலவர். |