நான் தங்களைப் பரிதாபமாகக் கெஞ்சுகிறேன். ஒவ்வொருவனுடைய இருதயத்தையும் இதுவரைக்கும் தடவிப் பார்த்ததில் சர்க்கார் எதிர்ப்புக்கள் தட்டுப்படுவது தவிர அதன் பக்கத்திலேயே ஏழைமக்களின் பசித்துன்பம் தட்டுப்பட்டதே கிடையாதா? அல்லது உழைப்புக்குத் தக்க பயன் கிடைக்காது. கொதிக்கும் இதயத்தை, உடையும் நெஞ்சத்தை உணரும் உணர்ச்சி அற்றுப் போனீர்களா? உடனே நான் என் நண்பரை நோக்கி ஓடினேன். போலீஸ் அதிகாரி என்னைப் பின்பற்றி வருவதை நான் உணர்ந்தேன். “ஐயோ எனக்கு ஆகாரம் ஏன்? நான் என் இருதயம் வெடித்து விட்டதாக உணருகிறேன். நான் மத்தியானம் சாப்பிட வழியில்லாமற் போயிற்று! நீர் என் திருநாமம் மற்றும் எனது வெளிச் செயல் இவற்றை மாத்திரம் அறிந்தீர். என் உள்ளத்தில் கிடந்த பசித்துன்பத்தையும், அதனால் நான் கண்ட அவமானத்தையும் நீர் எவ்வாறு அறிந்திருக்க முடியும்? அந்தோ நண்பரே, உலகம் இயங்குகிறது. உலக மக்கள் இயங்குகின்றனர். ஆயினும் அவ்வியக்கம் சந்தோஷத்துக்குரியது போல், சுறுசுறுப்புடையது போல் தோன்றலாம். இன்றைய உலகின் உட்புறம் எத்தனை கோணங்கள், எவ்வளவு அவமானம், தற்கொலை, அகால மரணம் அனைத்தும் சவக்குழியை நோக்கி எவ்வளவு விரைவாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன! ஆ! மார்பு....... ” நண்பரே தேறுதல் கொள்க! என்றேன். இதற்குள் போலீஸ் அதிகாரியும் மற்றவரும் நண்பருக்குப் பாலைக் கொடுக்கச் சொன்னார்கள். என் நடுக்கத்தைச் சமாளித்துக் கொண்டு பாலைத் தூக்கினேன்; என் முயற்சி பயனற்றதா யிற்று. என் நண்பர் பிரேதமானார். முதலாளியுலகமே! மக்களின் நன்மைக்காக ஆட்சி செய் வதாய்க் கூறும் ஆட்சி நாடகங்களே! ஏழைத் தொழிலாளர் உள்ளத்தின் சாயலை என் நண்பரின் கதியில் அறிகிறீர்களா? (உண்மை 14-8-71 மலர்-2 இதழ்-8) |