இதற்குள் பங்களாவில் நிறைந்திருந்த தொழிலாளரிடமும் ஒருவித பரபரப்பு ஏற்பட்டது. தொழிலாளர் அன்று ஆலைச்சொந்தக்காரரிடமும் அத்துமீறி நடந்து விட்டார்கள், அதனால் போலீஸ் அதிகாரி குற்றவாளிகளைத் தேடிக்கொண்டு அங்கு வந்தார். நிச்சயம் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டே இருக்கும். பெருங்கலகம் உண்டாகித்தான் இருக்கும். காருண்யமுள்ள சர்க்கார் நிலையில் பெருங்குழப்பம் உண்டாகித்தான் இருக்கும். இல்லாவிட்டால் பொதுமக்கள் நலத்தை மாத்திரம் தனியாக கருதித் தியாகம் புரியும் சர்க்கார்ப் பிரதிநிதி போலீஸ் அதிகாரி அங்கு வந்திருக்க முடியுமா? தொழிலாளிகளான வேலாயுதன், கந்தன் ஆகிய இருவரைப் போலீஸ் அதிகாரி கைது செய்தார். ஆலை முதலாளிக்கு விரோதமாகத் தொழிலாளர்களைக் கலகம் செய்யும்படி தூண்ட உத்தேசித்தற்காகத்தான் அந்த இருவர் மீது ஏற்பட்ட குற்றம். இருவரையும் போலீஸ் அதிகாரி கைது செய்துவிட்டு, மற்றத் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்துபோக வேண்டியதற்காகப் பயமுறுத்தும்போது, வேலாயுதன் முதலிய இருவரும் செய்த பெருங்குற்றத்தை விசாரித்துச் சொல்லிக் கொண்டிருந்தார். என் கையிற் கிடைத்த கொஞ்சம் பாலையும், வாழைப்பழங்களையும் ஏந்தி என் நண்பரை நோக்கித் துரிதமாக அந்த வழியாக நான் வரும்போது, ஒரு அதட்டல் வார்த்தை என்னை வழி மறித்தது. என் பெயர் சுப்பன் என்று விடை சொன்னேன். மீண்டும் போலீஸ்காரர் உன் பெயர் விநாயகம் அல்ல? கலகத்தைத் தூண்ட உத்தேசித்தவனல்லவா நீ? வேலாயுதன் கூட்டாளியல்லவா நீ? என்று கேட்டார். நல்ல வேளையாக எனக்கு வந்த சிரிப்பை மற்றொரு துக்கம் தடுத்து விட்டது. ஐயா கலகம் செய்யத் தூண்டும் உத்தேசத்தை எவ்வாறு நீங்கள் கண்டு அறிந்தீர்கள் என்கிறேன். போலீஸ் : | இங்கிலீஷ் ஆட்சி “ஒருவனுடைய இதயத்தைத் தடவி ஆராயும் வலிமையுடையது” தெரியுமா? |
|