தமிழர்கட்குப் படிப்பு ஒன்றா? அறிவுத்துறையில் அவர் கட்கு நாட்டம் ஏன்? என்றதொரு கொள்கை பரவிற்று தமிழர் கட்கிடையில்! இந்த நெருப்பு மழைக்குக் குடை ஏது? கல்விக்கும் தமிழர்க்கும் தொடர்பற்றுப் போயிற்று. தமிழ்ச் சான்றோர் அனைவரும் தமிழரை நோக்கிக் ‘கற்கை நன்றே கற்கை நன்றே’ என்று கதறினிர். ‘கற்க கசடற’ என்று கதறினர். இதற்கு மாறாகக் கல்வியின் பயனையே மறந்தனர். தமிழர்கள் இருட்டுக் கிடங்கில் குடி புகுந்தனர். வெளியில் எட்டிப் பார்க்கவும் எண்ணினாரில்லை. தமிழரசர்கள் கோயில்கள் கட்டினர். எங்கும் பெரிது பெரிதாக அருளைத் தேடச் சொன்னார்கள். விரைவில் இறந்து ஒழியும்படி இருட் காலமே தலைதூக்கி நடந்து கொண்டிருந்தது. இப்போதுதான் இந்த நூற்றாண்டின் நடுவில்தான் ஒரு மின்னல் தோன்றிற்று. காது கிழிய இடி ஒன்று இடித்தது. இருட்டுக் கிடங்கில் அடைப்பட்டிருந்த தமிழர் வெளியில் எட்டிப் பார்த்தார்கள். ஒளி தழுவிய வெளிவாழ்க்கைக்கு நல்லதாகக் காட்சியளித்தது. கல்விப்பயனை உணர்ந்தார்கள். தம்மக்களின் கண்ணற்ற நிலையை எண்ணிக் கலங்கினார்கள். இந்த நிலை வரவேற்கத் தக்கதன்றோ? தமிழ் மக்களின் தலைவர் என்போர் ஆட்சியில் அமர்ந்துள்ளோம் என்போர்-அனைவரும் இந்நிலை கண்டு மகிழ வேண்டுமன்றோ? கல்விக் கழகம் நோக்கித் தாம் பெற்ற மகனை-மகளைக் கையிற் பிடித்துச் செல்கிறார்கள்; கண்கலங்கித் திரும்புகிறார்கள்; வகுப்பில் இடமில்லையாம். அரசியல் தலைவரும் ஆளவந்தாரும் சிரிக்கிறார்கள் இந்நிலையைக் கண்டு. ஏனெனில், சிபார்சுக்குத் தம்மிடம் வரவேண்டிய நிலை பெற்றோர்களுக்கு ஏற்பட்டு விட்டதல்லவா? மெய்யாகவே, ஒரு மாணவருக்கு ஒரு துறையில் ஒரு வகுப்பில் இடங்கோரி ஆளவந்தார் வீட்டு-அரசியல் அலுவல் தலைவர் வீட்டுக் குறட்டுப்பந்தலின் காலைப்பிடித்துக் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. |