பக்கம் எண் :

98ஏழைகள்

நாள்தோறும் திருப்புளிசாமிக்கு ஐந்து கொழுந்திலை பறித்துக் கொடுக்க ஓர் ஆள் வைக்க வேண்டும். இன்னும் ஆள் வைக்கவில்லை திருப்புளிசாமி.

பறித்துத் தந்த ஐந்து இலைகளையும் அப்படியே வாயிற் போட்டு மென்று விழுங்குவதா?அரைத்து விழுங்குவதா? மருத்துவப் புலவரை நன்றாய்க் கேட்க வேண்டும். இன்னும் கேட்கவில்லை திருப்புளிசாமி.

வில்வமும் நாவலும் கொல்லையில் பயிரானது தொடங்கியே, இனிப்பு நீர்ப்பிணி என்னை விட்டுத் தொலைந்தது என்று திருப்புளிசாமி நாளொன்றுக்கு மூன்று வேளையும் பச்சரிசி பண்ணியமும் சோறும் உண்ணத் தலைப்பட்டதால் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்தே வந்தது இனிப்பு நீர்ப் பிணி!

இனிப்பு நீர்ப்பிணியால் சாகக்கிடந்த கொல்லை வீட்டுக் குப்புசாமி ஓர் ஏழை. ஆனால் முயற்சிச் செல்வம் மிகுதியாக அவனுக்கு உண்டு.

திருப்புளி வீட்டுக் கொல்லையில் நாவலும், வில்வமும் குப்பன் வீட்டுப் புறத்தில் என்றைக்குத் தலைகாட்டினவோ அன்று முதல், நாள் தவறாமல் தளிர் பறித்துத் தின்றான் குப்பன்.

ஆண்டு ஒன்று சென்றது. குப்பனைக் காணவந்த அவன் நண்பன் நாராயணசாமி, ‘உனக்கு இனிப்பு நீர்ப்பிணி எப்படி யிருக்கிறது, என்று கேட்கவே’?அதற்குக் குப்பன், ‘எனக்கு அந்த நோய் இருந்ததே நினைப்பில்லை’என்று சொன்னான்.

மருத்துவ மனையிற் கிடந்த திருப்புளிசாமி மருத்துவரை நோக்கிக் கேட்டான் ‘சாவேனா, பிழைப்பேனா’என்று.

‘நிலைமை கவலைக்கிடமானது’ என்றார் மருத்துவத் தலைவர்.