வேண்டியது அவசியம். இதைச் சொல்லுவோர் யார் என்பதை முதலில் கவனியுங்கள். அன்னிய ஆடை பகிஷ்காரம்; அன்னியர் உறவு பகிஷ்காரம், சைமன் கமிஷன் பகிஷ்காரம் என்று சொல்லிவிட்டு ஆனால் இங்கிலீஷ் அறிவினால் மக்கள் பணத்தைப் பிடுங்கும் வக்கீல் பகிஷ்காரம், இங்கிலீஷ் படித்ததால் உண்டாகும் டாக்டர் பகிஷ்காரம், இங்கிலீஷ் உத்தியோகஸ்தர் பகிஷ்காரம், இங்கிலீஷ் புத்தகப் பகிஷ்காரம், இங்கிலீஷ் பத்திரிகை பகிஷ்காரம் முதலிய பகிஷ்காரங்களைச் செய்யாதிருக்கிறார்களே அவர்களே இங்கிலீஷ் பொதுப்பாஷையாக வேண்டாம் - ஹிந்திதான் வேண்டும் என்கிறார்கள். இந்த நிமிஷம் வரைக்கும் இங்கிலீஷைப் பெருந்துணையாக உடையவர்கள் ஏதுமற்ற இந்தியை ஏற்றிச் சொல்லக் காரணம் என்ன? இங்கிலீஷ் சம்பந்தத்தால் மக்களின் தேசப்பாஷையில் ஓர் புதிய நிலை ஏற்பட்டால் தம்மை வைக்கமாட்டார்கள் என்றும் இமயம் முதல் குமரி ஈறாக இன்று தேசீய பாஷை இருக்கும் நிலையில் இருந்தால் மக்கள் பகுத்தறிவு கெட்டுக் கிடக்கட்டும் என்றும், இதனால் மக்களை மதம் வேதம் புராணம் என்ற கயிற்றால் கட்டிக் கழுத்தில் அதிகாரம் என்ற நுகத்தடி பாய்ச்சிப் “பழய நிலை” என்ற செக்கைச் சுற்றிச் சுற்றி வரும் மாடுகளாக ஆக்கலாம் என்றும் நினைக்கும் ஒரு மனிதன் இருப்பானானால் அந்த மனிதனிடமே, “தமிழன் தமிழிருக்க அது போன்ற இந்தியைப் பொது பாஷையாகப் படியுங்கள்” என்னும் வார்த்தையை எதிர்பார்க்கலாம். ஆனால், காங்கிரசும் காந்தியவர்களுமே இதைச் சொல்லுகிறார்கள். “அன்பனே! உன் தாயின் முலைப்பாலோடு உனக்குப் புகட்டிய உன் பாஷையில் உனக்கு நல்லபயிற்சி தேவை. அதையுயர்த்த உயர்த்த உன் நிலையுயரும். இரண்டாவதாக உன் அவசியத்துக்குத் தேவையான கலைகள் நிரம்பிய பிற பாஷையைப் படி!” என்ற சத்தம் மக்களிடம் உண்மை அன்புள்ளவன் வாயில் இருந்து வருவதாகும். |