பக்கம் எண் :

144

ளர்களையோ பழிப்பதுமில்லை; கொண்டாடுவதுமில்லை. அதேபோல் அந்த மதவாதிகளிடத்தில் மேற்படி சாமிகள் ஒட்டுவதில்லை. ஏன்? அவர்கள் தங்களைக் கொண்டாடாமல் இருப்பதால்தான்.

இதிலிருந்து நாம் அவசியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்றுண்டு. அதாவது இதர மதக்காரர்களைப் போல், இந்து மதக்காரர்களும், மேற்படி தெய்வங்களைக் கொண்டாடாமல் விட்டு விட்டால் மேற்படி கடவுளர்களும் அணுகாமல் விலகிவிடுவார்கள் என்பது சூரியனைப் போல் தெரிகிறது அல்லவா? ஏன் இந்து மதக்காரர்களும் அப்படி நடக்கக் கூடாது? அப்படி நடந்து கொள்வதனால் நன்மைதான் ஏற்படுகிறதே அன்றித் தீமை விளையாது? மேற்படி கடவுளர்களால் இதுவரை யாருக்கு என்ன நன்மை உண்டாகிவிட்டது? நன்மைக்குப் பதில் தீமைதான் உண்டாகியிருக்கிறது என நான் கூறக்கூடும்.

எந்தக் கடவுள் மீதும் எளியேன் நம்பிக்கையற்றவன் என்பதை நண்பர்கள் அறிந்ததிராவிடின் அதற்கு நான் ஜவாப்தாரியாக முடியாது. ஒரு கடவுள் மீதும் உறுதி கொள்ளாத நான் “சாமிகளைக் கொண்டாடாமலிருந்தால் அவர்களும் நெருங்கமாட்டார்கள்” எனக் கூறியதைப்பற்றி ஐயுற வேண்டாம். உண்மை என்னவென்றால் சாமிகள் மீது நம்பிக்கையுடையவர்களுக்காகவே கூறவந்தேனேயன்றி, என் போன்ற நாத்திகர்களுக்குக் கூறவில்லை என்பதை மனத்தில் பதித்துக் கொள்வீர்களாக!

சாமிகளைக் கொண்டாடாமல் விட்டுவிட்டால் அநேக நன்மைகள் உண்டாகும். முதலாவது, கண் திறக்கப்பட்டு விடுவார்கள். இரண்டாவது, பொருள் செலவு மீதியாகும். மூன்றாவது, நேரம் மீதியாகும். நான்காவது பிற மதக்காரர்களால் ‘காபீர்’, அஞ்ஞானி, மூடர் எனக் கேலி செய்யப்படுவதிலிருந்து விடுபடலாம்.