14 சுயமரியாதைக்காரர்களே! தொலைந்து போய்விடுங்கள்!
-(ஆஸ்திகர் சொல்கிறார்கள்)- இந்துக்கள் சொல்லும் கடவுளும், கிறிஸ்தவர்கள் சொல்லும் கடவுளும், மகம்மதியர்கள் சொல்லும் கடவுளும் அதோ பாருங்கள் வானத்தில் குஸ்தி போடுகிறார்கள்! இதோ உலகத்தில் பாருங்கள். அம்மூன்று கட்சிக்காரர்களும் சண்டை போடுகிறார்கள். ‘ஆட்டிவைத்தால் ஆரொருவர் ஆடாதாரே’ என்பது போல் கடவுள்களின் செய்கைபோல உலக மக்களின் செய்கைகள் இருப்பதில் ஆச்சரியம் என்ன? மதம் வேண்டாமென்று சொல்ல முடியுமா. அதோ பாருங்கள்! வானத்தில் மூன்று கடவுள்களின் யுத்த கூடாரங்கள் ! இதோ பாருங்கள் ! பூமியில் மூன்று கட்சிக்காரர்களின் கோயில்கள்! கோயில்கள் வேண்டாமென்பது பொருந்துமா? அதோ பாருங்கள், வானத்தில் மூன்று கடவுள்களின் சேனைத் தலைவர்கள்! இதோ பாருங்கள் பூமியில் மூன்று கட்சிகளின் வேத புத்தகங்கள்! வைதிக சாஸ்திரங்கள் வேதப் பிரமாணங்களை அசட்டை செய்யலாமா? அதோ பாருங்கள் வானத்தில் மூன்று கடவுள்களின் சேனைகளும் மாறி மாறித் தங்கள் எதிரிகளின் ஊர்களை நாசமாக்குகின்றன! இதோ பாருங்கள் பூமியில் மூன்று கட்சிகளும் எதிரிகளிடம் போய்ப் பிரசாரம் செய்கிறார்கள்! மதப்பிரசாரத்தை எப்படி எதிர்க்கலாம்? அதோ பாருங்கள் வானத்தில் மூவர்களின் யுத்தத்தால் ஏழைகளுண்டாகிச் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவிக்கிறார்கள்! |