பக்கம் எண் :

63மீரா

அவமானப்படுத்தக் கருதிய இராவணன் அனுமனுக்கு ஆசனம் கொடுக்கவில்லை. அதற்காக அனுமன் கவலைப்படவில்லை. தன் நீண்டவாலை ஒரு சுற்றுச்சுற்றி உயர்த்தி இராவணணின் அரியாசனத்துக்கு இணையாகச் சரியாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டான்.

நமக்கும் வால் இருந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்! வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் நாற்காலி பெஞ்சுகளைத் தூக்கி எறிந்து விடலாமே! ரயில்நிலையம், பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் வாலைச்சுருட்டி ஆசனமாக்கி அமர்ந்து கொள்ளலாமே, கவலையில்லாமல்... நாம் ‘வாலுக்குப் போவதெங்கே...?

தேசத்துக் குரங்குகளைப் பற்றி அளக்கிற வேகத்தில் எங்கள் தெருவுக்கு வந்த வி.ஐ.பி. களை மறந்து விட்டேனே!

தெருமுனையில் உள்ள அரசமரம்தான் அவைகளின் வாசஸ்தலம். அரசமர இலைகள் பொன் நிறமாய் அசைகின்றன என்றால் அந்தக் குரங்குகள் மூன்றும் கிளைக்குக் கிளை ஊஞ்சல் ஆடுகின்றன என்று அர்த்தம். பொழுது விடுந்ததும் மூன்று தெருவில் ஒரு முனையிலிருந்து மறு முனைவரை போர் வீரர்களைப் போல் வரிசையாய் நான்கு காலில் நடந்து திரும்பும்; பிறகு ஒவ்வொரு வீட்டுச்சுவராக ஏறும். பகைவர்களின் கோட்டைகளில் ஏறுவதைப் போல் ஒரு எண்ணம்... சேர சோழ பாண்டியர்களைப் போல் ஒரு கம்பீரம்...

என் வீட்டுக் கொல்லையில் உள்ள கொய்யா மரத்தின் உச்சிவரை ஏறி எங்களால் கொய்ய முடியாத காய்களை யெல்லாம் பறித்துச் சுவைத்துக் ‘காயிலே இனிப்பதென்ன’ என்று பாடாமல் பாடுகின்றன. பாதி கடித்து மீதியைக் கீழே