பெயரில் கவர்ச்சி வேண்டும் என்பதற்காகவோ என்னவோ பெண்களின் பெயர்களை வைத்துக்கொள்ளும் எழுத்தாளர்கள் இன்று பெருகி வருகிறார்கள். வாசகர்கள் தன்னைத் தெரியாமலிருக்கட்டும் என்று சுஜாதா போன்ற எழுத்தாளர்கள் புனைபெயர் சூடியிருக்கலாம். சுஜாதா வாசகர்களிடமிருந்து தன்னை மறைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால் இனிமேல் ‘ரங்கராஜன்’ என்ற புனை பெயரில்தான் அவர் எழுதவேண்டும்! பெயரில் ஏதோ இருப்பதால்தானே பெண்கள் நடிக்க வந்ததும் புதுப்பெயர் புனைகின்றனர். துறவு பூண்டதும் பந்த பாசங்களைத் துறப்பதுபோல் நடிகைகள் தங்கள் பூர்வாசிரம்ப் பெயர்களைத் துறக்கின்றனர். நதிமூலம் ரிஷிமூலம் கேட்கக் கூடாது என்பது போல நடிகைகளின் பெயர் மூலம் பற்றிப் பேசக்கூடாது. ஏதோ ஒரு முத்துப் பேச்சி ரம்பை ஆகலாம்; மூக்காயி மேனகையாக மாறலாம். எனக்குத் தெரிந்த, தமிழ்ப் பற்றுள்ள குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் நடிக்க விரும்பினார். அந்தப் பெண்ணின் பெயர் தமிழ்ச்செல்வி. வீட்டில் தாய் ‘செல்வி’ என்றும் தந்தை ‘தமிழ்’ என்றும் செல்லமாகக் கூப்பிடுவார்கள். நடிக்கப் போனதும் இயக்குநர் ‘தமிழ்ஸ்ரீ’ என்று அந்தப் பெண்ணின் பெயரை மாற்றவேண்டும் என்றார்... ராஜ்ஸ்ரீ, கலாஸ்ரீ மாதிரி.... அப்போதுதான் பெயர் எடுப்பாக இருக்கும் என்றார்.... ‘சீச்சீ நடுத்தது போதும்’ என்று பெண்ணைப் பெற்ற தந்தை ஒரே வார்த்தையில் சொல்லி விட்டார்! ஊர்ப்பெயர்களைப் பற்றி ஆராய்வது மேல்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஒரு ஆராய்ச்சித் துறையாக |