கிழமைகளில் அவள் ஞாயிறு “அன்று ஞாயிற்றுக்கிழமை...... கமலா ஆவி பறக்கும் காபியுடன் என்னை எழுப்பினாள்” என்று தொடங்கும் மத்தியதர வர்க்கத்துக் கணவன் - மனைவி கதைகள் நம்வார இதழ்களில் வாடிக்கையாக வெளிவந்த காலத்தை ஒருமுறை ஜெயகாந்தன் சிறுகதை வளர்ச்சி பற்றிப் பேசும்போது குறிப்பிட்டார். கதைகளில் - இலக்கியங்களில் இடம் பெறும் ‘அந்தஸ்து’ ஞாயிற்றுக் கிழமைக்குக் கிடைக்கிறதென்றால் அதற்குக் காரணம், பிறந்த வீட்டுச் சீதனங்களோடு வரும் மருமகள் போல் அது விடுமுறையோடு வருவதுதான். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது வெள்ளையர் ஆட்சி நமக்கு விட்டுப் போயுள்ள மிச்ச மீதிகளுள் ஒன்று. |