பக்கம் எண் :

வா இந்தப் பக்கம் 88

விடுமுறை என்பது ஒரு காலத்தில் மதசம்பந்தமான விழாக்களுக்கே அளிக்கப்பட்டது. புனித நாள் - Holyday - என்று அதற்குப் பெயர் ஏற்பட்டுப் பின்னால் அது விடுமுறை நாள் - Holyday - என்று மாறியதாகச் சொல்லப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை கிறித்துவர்களின் வழிப்பாட்டு நாள். வழிபாட்டு வசதிக்காக ஆங்கிலேயர்கள் தங்கள் ஆதிக்கக் கொடி பறந்த நாடுகளில் அதனை விடுமுறை நாளாக்கினார்கள். இதே மாதிரி இஸ்லாமிய நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளானது. இந்துக்களுக்கு எல்லாக் கிழமைகளும் ஏதாவது ஒரு விதத்ததில் புனிதமாக இருக்குமே.... என்றைக்கு விடுமுறை விடுவது என்பதில் நம் ஜோஸ்யர்களுக்கும் பூஜ்யர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற நல்ல எண்ணத்தில் தான் இன்றுவரை நம் அரசு கர்ஸான் காட்டிய வழியில் ஞாயிற்றுக் கிழமையையே விடுமுறையாகப் பின்பற்றுகிறது.

நேற்று எனக்கு வந்த சோவியத் யூனியன் காலண்டரைப் பார்த்தேன். அதில் ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமைகளில் தொடங்குவதைக் கவனித்து வியந்தேன். விடுதலை பெற்ற பிறகு நாமும் நம் காலண்டரிலாவது வேலைக்குப் புறப்படும் முதல் நாளிலிருந்து- திங்கட்கிழமையிலிருந்து, நமக்கோ விடுதலை உணர்ச்சிக்குச் சமமாய் இந்த விடுமுறை உணர்ச்சியும் இருக்கிறதோ! விடுமுறையை அனுபவிப்பதைப்போல் கொஞ்சம்கூட அலுப்பில்லாமல், ஆனந்தமாய் வேலைபார்க்க வேண்டும் என்றுதான் நம் அரசாங்கம் காலண்டரில் கை வைக்கவில்லையோ என்னவோ!