ஏயர்கோன் கலிக்காமர் ஆயும் நீதிச் சுந்தரனார் அடுத்து வரலும் ஆங்குஇறந்த தூய உயிரும் படைத்தெழுந்து சூலை தவிர்த்து தோழமைசேர் ஏயர் கோன்நம் கலிக்காமன் இல்வாழ்க் கையினீடு எழில்நாடு வாயில் நீடு மணிமாடம் வளம்சேர் சோழ மண்டலமே | 21 |
பெருமங்கலம் என்னும் ஊருக்கு உடையாராய்ச் சோழன் படைத் தலைவராய் வாழ்ந்தவர் ஏயர்கோன் கலிக்காமர். சிவபெருமான் சுந்தரர் பொருட்டுத் தூது சென்ற நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற கலிக்காமர் சுந்தரர் மீது வெறுப்புக் கொண்டு வாழ்ந்தார். சுந்தரர்பால் கலிகாமருக்கு அன்பு உண்டாக்க நினைத்த சிவபெருமான் கலிக்காமருக்குச் சூலை நோயை உண்டாக்கினார். அன்றியும் இந்நோய் சுந்தரராலேயே தீரும் என்றார். இறைவன் சுந்தரருக்குக் கட்டளையிட அவரும் வந்தார். சுந்தரர் வருவதைக் கேள்வியுற்ற கலிக்காமர் வாளால் வயிற்றைக் கிழித்துக் கொண்டு இறந்தார். கலிக்காமரின் மனைவியார் (மானக் கஞ்சாறர் மகள்) அழாமல் சுந்தரரை வரவேற்று உபசரித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட சுந்தரர் ஏயற்கோன் கலிக்காமரை உயிர்ப்பித்தார். இருவரும் நெடுங்காலம் நண்பர்களாக வாழ்ந்தனர். கோட்புலியார் துதிக்கும் பரமன் பொருள்கவர்ந்த சுற்றம் அனைத்தும் சுடர்வாளால் கதிக்கும் படிமேல் அறக்கண்டார் கயிலைக் கிரியும் காணிகொண்டார் குதிக்கும் புதுநீர் நாட்டியத்தான் குடிவே ளாளர் கோட்புலியார் மதிக்கும் மரபோர் பெறும்காணி வளம்சேர் சோழ மண்டலமே | 22 |
திருநாட்டியத்தான் குடியில் வாழ்ந்த வேளாண்குலச் செல்வரான கோட்புலியார் சோழனது படைத்தலைவராய்த் திகழந்த்ார். ஒருமுறை போர்க்களம் செல்கையில் அவர் தம் நெல்லெல்லாம் சிவபெருமான் அமுதுபடிக்கு ஆகவென நெற்கூட்டில் அடைத்து வைத்து அதனை ஒருவரும் தொடக்கூடாது என்று கூறிச்சென்றார். கோட்புலியார் போர்க்களம் சென்றபின் பஞ்சம் வரவே திருவமுதுபடி நெல்லை இக்காலத்து எடுத்துப் பயன்படுத்திக் கொண்டு பின் திருப்பிக் கொடுத்து விடலாம் எனக் கூறி உடைத்து உறவினர் நெல்லை எடுத்துச் செலவழித்து விட்டனர். திரும்பி வந்த கோட்புலியார் பரிசில் ஈவதாக அனைவரையும் அழைத்து வாளுக்கு இரையாக்கினார். கோட்புலியார் வாளால் இறந்தமையால் அனைவரும் கோட்புலியாரோடு சிவபதம் அடைந்தனர். |