அரிவாட்டாயர் கூலிக்கு அறுத்த நெல்லரிசி குழந்தைக் கீரை மாவடுவும் சாலக் கமரின் இடைக்கவிழ்த்த தாயன் ஊட்டி தனையரிவாள் மேலிட்டு அறுப்ப மாவடுவின் விடேல் விடேலென்று ஒலிமுழங்க மாலுக்கு அரிய பதம்சேர்ந்தோன் வளம்சேர் சோழ மண்டலமே | 20 |
கணமங்கலம் என்னும் ஊரில் வாழ்ந்த தாயர் என்பார் செந்நெல்லில் நல்லவற்றை அமுதாக்கி முற்றாத கீரையையும், மாவடுவையும் சேர்த்து அமுதாக்கி இறைவனுக்குப் படைத்து வந்தார். அவர் செல்வம் எல்லாம் அழிந்தது. கூலிக்கு நெல் அறுத்து வாழ்ந்தபோதும் மேற்கண்டவாறு இறைவனுக்குப் படைத்து வந்தார். கூலிக்கு வேலை கிடைக்காத போது நீரை மட்டும் உட்கொண்டு படையலை நிறுத்தாமல் செய்து வந்தார். ஒருநாள் கால் இடறி வெடிப்பொன்றில் நிவேதனப் பொருளைச் சிதறவிட்டார். இதனால் வருந்திய தாயர் அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொள்ள முனைந்தார், அப்போது மாவடு கடிக்கும் ஓசையும் உண்ணும் ஒலியும் எழுந்தது. சிவபெருமான் தோன்றித் தரிசனம் தந்தார். கணமங்கலம் இன்று கண்ணந்தங்குடி என வழங்குகிறது. அங்கு அரிவாள் தாய நாயனாருக்குக் கோயில் உள்ளது. |