பக்கம் எண் :

சோழமண்டல சதகம்17

முனையடுவார்

வீடார் தொடைக்கும் படைக்கும்இவன்
          மேலோன் என்ன வேந்தருக்குத்
தேடார் வலியார் எண்ணாரைச்
          செகுத்துப் படைத்த செழும்பொன்எலாம்
நீடாது அளித்து முனையடுவார்
          நீடூர் அமர்ந்து நெறிசேர்ந்தார்
வாடாது இருக்கும் அரசிருப்பு
          வளம்சேர் சோழ மண்டலமே
24

நீடுர் என்னும் தலத்தில் அவதரித்த முனையடுவார் என்பார் தம்மை வந்து ஒத்தாசைக்கு அழைப்பவரோடு சென்று பகைவரை வென்று அதனால் கிடைத்த செல்வம் முழுவதையும் ஈசனுக்கும், ஈசன் அடியாருக்குமே செலவழித்துப் பரகதி அடைந்தார்.

செருத்துணையார்

தஞ்சைப் பதிவாழ் செருத்துணையார்
          தடந்தேர் வளவன் தன்மனையாள்
கொஞ்சத்து ஒருபூ வந்தெடுப்பக்
          குறைத்தார் நாசிக் குணமன்றே
மிஞ்சப் படுவாள் ஆண்மையினும்
          வேளாண் மையினும் மேம்பாடு
மஞ்சில் குலவும் இளஞ்சோலை
          வளஞ்சேர் சோழ மண்டலமே
25

மருகல் நாட்டுத் தஞ்சையில் வாழ்ந்த வேளாண்குலச் செம்மல் செருத்துணையார் திருவாரூர் வந்து திருப்பள்ளித்தாமம் ஆக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். (இத் தஞ்சை தலைநகர் தஞ்சையின் வேறானது)

ஒருநாள் பல்லவ மன்னன் சிங்கப்பெருமாள் மனைவியார் இறைவனை வணங்க வந்தாள். திருப்பள்ளித்தாம மண்டபத்தின் கீழ்க் கிடந்த ஒரு மலரை எடுத்து முகர்ந்து பார்த்தாள். அதனைக்கண்ட செருத்துணையார் சிவபெருமான் திருமேனிக்கு ஏறும் மலரை முகர்ந்த அவள் மூக்கை அறுத்தார். முதல் அடியில் வளவன் என்பது பல்லவன் என்று இருத்தல் வேண்டும்.

கடிது முற்றி மற்றவள்தன்
          கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப்
          பற்றிப் பரமர் செய்யசடை
முடியில் ஏறும் திருப்பூமண்
          டபத்து மலர்மோந் திடுமூக்கைத்
தடிவன் என்று கருவியினால்
          அரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்

(பெரியபுராணம், செருத்துணை நாயனார் - 5)