சத்தியார் பரிஞ்ச வேடம் திருநீறு தரித்தோர்ப் புகழ்ந்து பணியாமல் தெரிஞ்ச வாய்மை அடியாரைச் சீறி இகழ்ந்த செந்நாவை அரிஞ்ச வீர விரதமுற்றும் அடலார் சத்தி யார்அமர்ந்த வரிஞ்சி யூரும் தழைத்துளது வளம்சேர் சோழ மண்டலமே | 26 |
வரிஞ்சியூர் என்னும் ஊரில் சத்தியார் என்னும் ஓர் அடியவர் வாழ்ந்து வந்தார். திருநீறு வேடம் அணிந்தாரைப் பணிவார். சிவபெருமானை இழிவாகக் கூறுவார் நாவைப் பிடித்து இழுத்து அறுக்கும் இயல்பினர். வரிஞ்சியூர் - இரிஞ்சியூர் என்ற பெயருடன் திருவாரூர்க்கு அருகில் உள்ளது. அத்தர் ஆகிய அங்கணர் அன்பரை இத்த லத்தில் இகழ்ந்துஇயம் பும்முறை வைத்த நாவை வரிந்தரி சத்தியார் சத்தி யார்எனும் நாமம் தரித்துளார் (பெரியபுராணம், சத்திநாயனார் - 3) ஞானப்பிரகாசர் பகர்ந்த கமலைத் தியாகேசர் பஞ்சாக் கரத்தின் பயன்அறிந்த திகந்த குருவா யிரப்ரபந்தம் செய்த குரவன் திருவாரூர் உகந்த ஞானப் பிரகாசன் உண்மைக் குருவின் உயர்குலத்தோர் மகிழ்ந்த வாழ்வு பன்னாளும் வளம்சேர் சோழ மண்டலமே | 27 |
திருவாரூரில் சைவ ஆச்சாரியர் பரம்பரையில் சிதம்பரநாத தேசிகர் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் ஞானப்பிரகாசர். அவரைக் கமலை ஞானப்பிரகாசர் என்பர். இவருக்குச் சீடர்கள் பலர். அவருள் ஒருவர் மதுரையம்பதி ஞானசம்பந்தர். அவர் சீவில்லிபுத்தூரில் சுப்பிரமணிய பிள்ளை என்ற சிவநேயச் செல்வருக்கும் மீனாட்சியம்மை என்ற மெல்லியலாருக்கும் மகனாகத் தோன்றியவர். அவர் தன்குரு ஞானப்பிரகாசர் மீது ‘ஞானப்பிரகாச மாலை’ என்னும் நூலைப் பாடியுள்ளார். அந்நூல் ‘பண்டாரக் கலித்துறை’ என்றும் கூறப்படும். ஏற்கனவே மதுரைச் ‘சொக்கநாதர்’ கலித்துறை என்னும் நூலைப் பாடியிருந்தார். |