ஆரார் பகைக்கினும் ஆரார் நகைக்கினும் ஆவதுண்டோ சீரார் கமலையுள் ஞானப் பிரகாசன்என் சிந்தையுள்ளே பேரா திருந்து சிவானு பவந்தரப் பெற்றதினால் வாராது சென்மமும் போகாது பேரின்ப வாரியுமே (ஞானப்பிரகாசமாலை - 13) என்பது ஞானசம்பந்தர் பாடிய ஞானப்பிரகாச மாலையில் ஒரு பாடலாகும். ஞானப்பிரகாசர் மரபினர் ஆண்டுதோறும் ஐப்பசி மாதக் கிருஷ்ண பட்ச சஷ்டியில் இவருக்குக் குருபூசை விழா நடத்துகின்றனர். சைவ உலகில் பலர் ஞானப் பிரகாசர் என்று பெயர் பூண்டுள்ளனர். கமலை (திருவாரூர்) ஞானப்பிரகாசர் என்னும் இவர் பஞ்சாக்கரத்தின் பயன் அறிந்தவர். பல நூல்களை இயற்றியவர். தியாகராசப் பள்ளு என்பது அவற்றில் ஒன்று (சதகம் 91). இவருடைய உருவச்சிலை திருவாரூர் வடக்கு இராச கோபுர நுழைவாயிலின் கீழ்புறம் உள்ளது. கமலை ஞானப்பிரகாசரால் ‘அருள் ஒளி வழங்கும் குருநாதர்’ என்று கூறப்பெற்றுத் திருமயிலாடுதுறைக்குக் கிழக்கே வில்வ வனமாய் விளங்கிய காவிரிக் கரையில் உள்ள தருமபுரத்திற் சென்று அருந்தவம் பெருக்கி வாழ ஞானப்பிரகாசரால் ஞானசம்பந்தர் அனுப்பப்பட்டார். அவர் குருஞானசம்பந்தர் ஆனார். அவரே தருமையாதீன முதல்வர் குருஞானசம்பந்தர் ஆவார். நாகை காயிதேமில்லத் மாவட்டத்துச் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் தருமை முதல்வர் குருஞான சம்பந்தரின் ஆசிரியர் கமலை ஞானப்பிரகாசருக்கு கி.பி. 1560இல் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் கிருஷ்ணமாராசையன் என்பார் உத்தரவுப்படி பரதேசி முத்திரையும், கணக்கெழுத்தும் அமைத்துக் கொள்ளும்படி சர்வ மானியம் அளிக்கப்பட்டதை அறிகிறோம் (ARE 104 of 1911). இக்கல்வெட்டின்படி சிக்கல், வடகுடி, வோடாச்சேரி முதலிய சில கோயில்கட்கு கமலை ஞானப்பிரகாசர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். திருவாரூர் ஞானப்பிரகாசர் பண்டாரம் எனக் கல்வெட்டுக் குறிக்கிறது. கல்வெட்டில் விசயநகர மன்னர் சதாசிவதேவமகாராயர் பெயர் குறிக்கப்படுகிறது. கமலை ஞானப்பிரகாசர் இயற்றிய திருமழபாடிப் புராண ஏட்டின் மூலம் அந்நூல் கி.பி. 1566இல் பாடப்பட்டதாகத் தெரிகிறது. எனவே கி.பி. 1560 வாக்கில் தருமை ஆதீன முதல்வர் அருளாட்சி தொடங்கினார் என்பது உறுதிப்படுகிறது. வாழையடி வாழையென அச் சீர்மிகு மரபில் மகாசந்நிதானமாக எழுந்தரு இன்று அருளாட்சி புரிபவர்கள் தவத்திரு சண்முக தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் ஆவார்கள். |